டெல்லி :இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் முக்கிய திட்டமான ககன்யான் (Gaganyaan) திட்டத்தில் முக்கிய மைல்கல்லாக பாராசூட் சோதனை வெற்றி பெற்றுள்ளது. விண்கலம் பூமிக்கு திரும்பும்போது அதன் வேகத்தை குறைத்து பாதுகாப்பாக தரையிறங்க உதவும் பாராசூட் அமைப்பின் சோதனை சண்டிகரில் உள்ள டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகத்தின் (TBRL) ரயில் பாதையில் ராக்கெட் ஸ்லெட் வசதியில் நடத்தப்பட்டு வெற்றிகரமாக முடிந்துள்ளது.
ககன்யான் திட்டம் இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமாகும். இதன் மூலம் மூன்று இந்திய விண்வெளி வீரர்களை பூமியின் தாழ்நிலைச் சுற்றுப்பாதைக்கு அனுப்பி, அங்கு மூன்று நாட்கள் தங்க வைத்து, பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப அழைத்து வருவது இத்திட்டத்தின் நோக்கம். இதன்மூலம் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு சொந்தமாக மனித விண்வெளிப் பயணத்தை நடத்தும் நான்காவது நாடாக உயரும்.
2018 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து சுமார் 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் தொழில்நுட்ப சவால்களால் சில தாமதங்கள் ஏற்பட்டாலும், தற்போது இத்திட்டம் இறுதிக் கட்டத்தில் உள்ளது.இந்த பாராசூட் சோதனை வெற்றி, விண்கலம் வளிமண்டலத்தில் நுழையும்போது அதன் வேகத்தை குறைத்து தரையிறங்குவதை உறுதி செய்யும் முக்கிய அம்சத்தை வலுப்படுத்தியுள்ளது.
2025 டிசம்பரில் முதல் மனிதரில்லா சோதனை ஏவுதல் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மேலும் சில மனிதரில்லா பயணங்களுக்குப் பிறகு, 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மனிதர்களுடன் கூடிய பயணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்கு முன்பு வியோமித்ரா என்ற பெண் ரோபோவை விண்வெளிக்கு அனுப்பி உயிர் ஆதரவு அமைப்புகளை சோதனை செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த வெற்றிகரமான பாராசூட் சோதனை ககன்யான் திட்டத்தின் பாதுகாப்பு மற்றும் வெற்றிக்கான முக்கிய படியாக அமைந்துள்ளது.
