வாஷிங்டன் : மத்திய கிழக்கில் (Middle East) இஸ்ரேல் - ஈரான் இடையேயான ஏவுகணைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரடியாகத் தொலைபேசியில் அழைத்து மிகக் கடுமையான இறுதி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
பொதுவாக இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்படும் அமெரிக்கா, இந்த முறை நெதன்யாகுவிடம் காட்டியுள்ள அதிரடி முகம் ஒட்டுமொத்த சர்வதேச வட்டாரங்களையும் உலுக்கியுள்ளது.
டிரம்பின் இந்த ரகசிய போன் காலுக்குப் பிறகு, இஸ்ரேலின் பிரபல 'சேனல் 12' (Channel 12) ஊடகத்திற்கு டிரம்ப் அளித்த பேட்டியில், நெதன்யாகுவிடம் தான் பேசியதை அப்படியே போட்டுடைத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில் "நான் பிபியிடம் (நெதன்யாகு) பேசினேன். 'நீ என்ன செய்கிறாய் என்பதில் இனி மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால், ஈரானுடன் மீண்டும் நீ மோதலைத் தொடங்கினால், விரைவில் இந்த உலக அரங்கில் நீ முற்றிலும் தனித்துவிடப்படுவாய் என்று மிக ஓப்பனாகவே எச்சரித்தேன்."
அமெரிக்காவின் உதவியோ, ராணுவப் பின்பலமோ (US Military இல்லாமல் இஸ்ரேல் தனித்துப் போரிட நேரிடும் என்ற மறைமுக மிரட்டலையே டிரம்ப் விடுத்துள்ளார். டிரம்பின் இந்த அசுர அழுத்தத்தைத் தொடர்ந்து, ஈரானின் ராணுவ முகாம்கள் மற்றும் பெட்ரோகெமிக்கல் ஆலைகள் மீது நடத்தி வந்த அடுத்தகட்ட வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இருப்பினும், இதில் ஒரு தந்திரோபாய லூப்ஹோல் உள்ளது.
மேலும் தொடர்ந்து அவர் பேசுகையில், "டிரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தினாலும், எல்லையில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், லெபனான் தலைநகர் பெயிரூட்டின் (Beirut) தெற்குப் புறநகர்ப் பகுதிகள் மீது இஸ்ரேல் தனது முழு பலத்தையும் காட்டித் தாக்கும்" என இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மறுபுறம், "இஸ்ரேல் லெபனான் மீது கைவைத்தால், நாங்கள் மீண்டும் இஸ்ரேல் மீது இன்னும் கொடூரமான ஏவுகணைத் தாக்குதலை நடத்துவோம்" என ஈரானின் புரட்சிகர காவல் படையும் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இறுதிக்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் மிக ரகசியமாக நடந்து வருவதாகவும், "இன்னும் இரண்டு வாரங்களுக்குள் (2 Weeks) நாங்கள் முழுமையான வெற்றியைப் செய்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையைக் கணிசமாகக் குறைப்போம்" என்றும் டிரம்ப் சவால் விட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
