காசாவை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேல்... அரசின் முடிவுக்கு ராணுவம் கடும் எதிர்ப்பு!

2005ம் ஆண்டு காசாவிலிருந்து இஸ்ரேல் வெளியேறிய நிலையில், தற்போது காசாவை முழுமையாக கைப்பற்றும் முடிவுக்கு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

israel army gaza

தெல் அவிவ்:இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவை, காசா நகரை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு ஆகஸ்ட் 8, 2025 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. 2005-ம் ஆண்டு காசாவிலிருந்து இஸ்ரேல் வெளியேறிய நிலையில், இந்த முடிவு காசாவை மீண்டும் முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கத்தை காட்டுகிறது. இந்த திட்டம், ஹமாஸை முறியடிப்பதையும், பணயக் கைதிகளை மீட்பதையும் நோக்கமாகக் கொண்டதாக அரசு கூறினாலும், இது குறித்து இஸ்ரேல் ராணுவம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எயால் ஸமிர், காசாவை முழுமையாக கைப்பற்றுவது, அங்கு வைக்கப்பட்டுள்ள 50 பணயக் கைதிகளில் 20 பேர் உயிருடன் இருப்பவர்களை ஆபத்தில் ஆழ்த்தும் என்று எச்சரித்தார். இது குறித்து அவர் பேசுகையில், “இந்த முடிவு, பணயக் கைதிகளை மீட்கும் முயற்சிகளை பாதிக்கும் மற்றும் பாலஸ்தீனிய மக்களிடையே மனிதாபிமான நெருக்கடியை மோசமாக்கும்,” என்று அவர் கூறியதாக மூன்று இஸ்ரேலிய ஆதாரங்கள் தெரிவித்தன. மேலும், கடந்த இரு ஆண்டுகளாகப் போரில் ஈடுபட்டு, சோர்ந்து போயுள்ள ராணுவத்திற்கு இது மேலும் பளு சுமத்தும் என்றும் ஸமிர் எச்சரித்தார்.

இந்த முடிவுக்கு இஸ்ரேல் எதிர்க்கட்சிகளும், பணயக் கைதிகளின் குடும்பங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் யைர் லாபிட், “காசாவை கைப்பற்றுவது செயல்பாட்டு, தார்மீக, பொருளாதார ரீதியாக மோசமான முடிவு,” என்று விமர்சித்தார். பணயக் கைதிகளின் குடும்பங்கள், இந்த நடவடிக்கை தங்கள் உறவினர்களை இஸ்ரேல் ராணுவமே அல்லது ஹமாஸ் கொலை செய்யும் அபாயத்தை அதிகரிக்கும் என்று அச்சம் தெரிவித்தனர்.

மேலும், கடந்த 2023 அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் தாக்குதலால் தொடங்கிய இந்தப் போரில், இஸ்ரேல் தொடக்கத்தில் காசாவை கைப்பற்றும் எண்ணம் இல்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.இந்தத் திட்டத்தின் கீழ், காசா நகரில் இருந்து பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வலுக்கட்டாயமாக தெற்கு பகுதிகளுக்கு இடம்பெயர வேண்டியிருக்கும், இது ஏற்கனவே மோசமடைந்துள்ள மனிதாபிமான நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேல் ராணுவம் ஏற்கனவே காசாவின் 75% பகுதிகளை கட்டுப்படுத்தி வருவதாகவும், இந்தப் புதிய நடவடிக்கை காசா நகரையும், கான் யூனிஸ் வரையிலான கடற்கரைப் பகுதிகளையும் இலக்காகக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பை சந்திக்கலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதே சமயம் ஐநா சபை இஸ்ரேல் முடிவால் பேரழிவு ஏற்படும் என எச்சரித்துள்ளது.