இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்திய பயணம் ரத்து! காரணம் என்ன?

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்திய பயணம் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

benjamin netanyahu india visit

டெல்லி :இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவுக்கு வரத் திட்டமிட்டிருந்தார். ஆனால், டெல்லி கார் குண்டுவெடிப்பு காரணமாக பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டு இந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது 2025-ல் நெதன்யாகுவின் இந்தியப் பயணம் ரத்தாவது மூன்றாவது முறை. இஸ்ரேலிய ஊடகமான i24NEWS-ன் கூற்றுப்படி, நெதன்யாகு இந்தியாவுக்கு வருவதற்கான புதிய தேதியை 2026-ல் தேடுவார். பிரதமர் மோடியை சந்திக்கும் இந்தப் பயணம், இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நெதன்யாகுவின் இந்தியப் பயணம் முதல் முறையாக ஏப்ரல் 2025-ல் இஸ்ரேல் தேர்தல்கள் காரணமாக ரத்தானது. இரண்டாவது முறை செப்டம்பர் 9 அன்று திட்டமிட்டிருந்த ஒரு நாள் பயணம், இஸ்ரேல் தேர்தல்கள் (செப்டம்பர் 17) காரணமாக ரத்தானது. இப்போது மூன்றாவது முறையாக டிசம்பர் பயணம் ரத்து. டெல்லி கார் குண்டுவெடிப்பு நவம்பர் 10 அன்று நடந்தது, அதில் 15 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

இது 10 ஆண்டுகளுக்குப் பின் டெல்லியின் மோசமான தீவிரவாதத் தாக்குதல். நெதன்யாகு, “இந்தியாவின் தைரியமான மக்களுக்கு இஸ்ரேல் ஆதரவாக நிற்கிறோம்” என்று இரங்கல் தெரிவித்திருந்தார். ஆனால் பாதுகாப்பு மதிப்பீடுகளுக்குப் பின் பயணம் ரத்து செய்யப்பட்டது.இந்தப் பயணம் ரத்து இந்திய-இஸ்ரேல் உறவுகளுக்கு சிறு தடையாக அமைந்துள்ளது. நெதன்யாகு இந்தியாவுக்கு கடைசியாக 2018 ஜனவரியில் வந்தார். அதற்கு முன் 2017-ல் மோடி தெல்அவிவ் சென்று முதல் இந்திய பிரதமராக இஸ்ரேலுக்குச் சென்றார்.

இரு தலைவர்களின் நெருக்கமான உறவு, பாதுகாப்பு, தொழில்நுட்ப, விவசாயம், நீர் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தியது.  ஜூலை மாதம் நெதன்யாகுவின் கட்சி, அவரை மோடி, டிரம்ப், புடின் உடன் போஸ்டர் போட்டு தேர்தல் பிரச்சாரம் செய்தது. இந்தப் பயணம் ரத்து காரணமாக 2026-ல் புதிய தேதி தேடப்படும் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.