பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர் (PoJK) பகுதியில், கடந்த சில தினங்களாகப் பாகிஸ்தான் அரசுக்கு எதிராகப் பொதுமக்கள் நடத்தி வரும் உள்நாட்டுப் போராட்டம் தற்போது ஒரு மாபெரும் ஆயுத மோதலாகவும், போராகவும் (Geopolitical Crisis) உருவெடுத்துள்ளது.
அங்கு மக்கள் நலனுக்காகப் போராடி வரும் 'ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி' (JAAC) என்ற அமைப்பைப் பாகிஸ்தான் அரசு திடீரென 'பயங்கரவாத இயக்கம்' என அறிவித்து தடை செய்ததைத் தொடர்ந்து, ராவலாகோட் உள்ளிட்ட பல நகரங்களில் வரலாறு காணாத வன்முறை வெடித்துள்ளது. இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
மக்களின் அடிப்படைப் பொருளாதார உரிமைகளுக்காகத் தொடங்கப்பட்ட இந்த அமைதியான போராட்டம், இந்த வாரம் ஒரு குறிப்பிட்ட அரசியல் காரணத்திற்காக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
வரவிருக்கும் ஜூலை 27, 2026 அன்று ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டசபைக்கான தேர்தல் நடக்கவுள்ளது. மொத்தமுள்ள 45 தொகுதிகளில், 12 இடங்களை 'அகதிகளுக்கு' (Refugees) பிரத்தியேகமாக ஒதுக்கீடு செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இந்த 12 இட ஒதுக்கீடு என்பது, பாகிஸ்தான் அரசு தங்களுக்குச் சாதகமான வெளிஆட்களை உள்ளே கொண்டு வந்து, காஷ்மீரின் ஒட்டுமொத்த அரசியல் அதிகாரத்தையும் தன்வசப்படுத்திக் கொள்ள நடத்தும் சதி என JAAC குற்றம் சாட்டி, தேர்தலை முற்றுகையிட அழைப்பு விடுத்தது. இதனாலேயே இந்த இயக்கம் கடந்த வெள்ளிக்கிழமை அதிரடியாகத் தடை செய்யப்பட்டது.
வெள்ளிக்கிழமை இரவு உள்ளூர் வியாபாரி ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்தது. ஞாயிற்றுக்கிழமை அன்று, மற்றொரு போராட்டக்காரரின் உடலை மருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறையில் இருந்து எடுக்க முயன்றபோது, பாதுகாப்புப் படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
ராவலாகோட் சிவிலியன் கமிஷனர் சர்தார் வஹீத் கான் கூறுகையில், "போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகள் மற்றும் தானியங்கி துப்பாக்கிகளால் தாக்கியதால், பாதுகாப்புப் படையினர் நடத்திய எதிர் நடவடிக்கையில் 6 பேர் கொல்லப்பட்டனர்" என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால், பலியான பொதுமக்களின் எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகம் என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணையச் சேவைகள் (Internet Blackout) முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதற்கு எதிராகப் சர்வதேச அரங்கில் தற்போது குரல் எழுந்துள்ளது.
இப்படியான சூழ்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை உடனடியாக நிறுத்தக் கோரி, பிரிட்டன் நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 50 எம்பிக்கள் (MPs) ஒன்றிணைந்து பிரிட்டன் வெளியுறவு அமைச்சருக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அதன்படி, எங்கள் நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டினர் யாரும் தலையிடக் கூடாது. பிரிட்டன் எம்பிக்கள் முன்வைக்கும் கருத்துகள் அனைத்தும் ஆதாரமற்றவை. லண்டனில் சொகுசாக இருந்துகொண்டு, எங்கள் நாட்டில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு யாரும் ஆதரவு கொடுக்க வேண்டாம்" எனப் பாகிஸ்தான் அரசு ஆக்ரோஷமாகப் பதிலடி கொடுத்துள்ளது.
