இந்தியா மீதான வரி உயர்வு குறித்த ட்ரம்பின் எச்சரிக்கைக்கு ரஷ்யா கண்டனம்.!

இந்தியா மீது வரிகளை விதிக்கும் அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் சட்டவிரோதமானது என்று கிரெம்ளின் கூறுகிறது.

Russia -Trump tariff threat

மாஸ்கோ :அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் கட்டணத்தை கணிசமாக உயர்த்தப்போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் எண்ணெய் மற்றும் இராணுவ உபகரணங்கள் வாங்குவதற்காக கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்ததற்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு ஆதரவாக ரஷ்யா களமிறங்குகிறது, டிரம்பின் கட்டண அச்சுறுத்தல் சட்டவிரோதமானது என்று ரஷ்யா கூறியுள்ளது. கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ”இந்தியாவுக்கு தனது வர்த்தக பங்காளிகளைத் தேர்ந்தெடுக்கவும், தேசிய நலன்களைப் பாதுகாக்கவும் உரிமை உள்ளது என்று கூறி, இத்தகைய அச்சுறுத்தல்களை சட்டவிரோதமானவை மற்றும் சர்வதேச வர்த்தக விதிகளுக்கு முரணானவை” என விமர்சித்தார்.

மேலும், “இறையாண்மை கொண்ட நாடுகள் தங்கள் சொந்த வர்த்தக கூட்டாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கொண்டிருக்க வேண்டும், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டாளர்களையும், ஒரு குறிப்பிட்ட நாட்டின் நலன்களுக்காக வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் வடிவங்களைத் தாங்களாகவே தேர்வுசெய்யும் உரிமையையும் கொண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்

முன்னதாக இதற்கு பதிலளிக்கும் வகையில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில், ‘அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதைத் தொடர்ந்தாலும், இந்தியாவை குறிவைப்பது நியாயமற்றது’ என்று பதிலடி கொடுத்தது.