வங்கதேசம் :இந்து சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்த அச்சம் தொடரும் நிலையில், ராஜ்பரி மாவட்டத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தீபு சந்திர தாஸ் என்ற இளைஞர் மதநிந்தனை குற்றச்சாட்டில் கொல்லப்பட்ட நிலையில், தற்போது அம்ரித் மண்டல் (வயது 29, சம்ராட் என்றும் அழைக்கப்படுபவர்) என்ற இளைஞர் உள்ளூர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
ராஜ்பரி மாவட்டத்தின் பங்க்ஷா பகுதியில் உள்ள ஹொசென்தங்கா கிராமத்தில் டிசம்பர் 24, 2025 இரவு சுமார் 11 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில், அம்ரித் மண்டல் பணம் பறிக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு கும்பலால் தாக்கப்பட்டார். போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், சிகிச்சை பலனின்றி அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜ்பரி சதர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.போலீசார் மற்றும் வங்கதேச இடைக்கால அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த கொலை மதரீதியானது அல்ல, மாறாக பணம் பறித்தல் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்ரித் மண்டல் உள்ளூர் குற்றக் கும்பலின் தலைவராக (“சம்ராட் பஹினி” என்று அழைக்கப்பட்ட கும்பல்) இருந்ததாகவும், அவர் மீது கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவர் இந்தியாவில் தலைமறைவாக இருந்து சமீபத்தில் திரும்பியதாகவும் தகவல்கள் உள்ளன.இந்த சம்பவம் தீபு சந்திர தாஸ் கொலைக்குப் பிறகு வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. இருப்பினும், அதிகாரிகள் இது குற்றச் செயல்கள் தொடர்பானது என்று வலியுறுத்தியுள்ளனர். போலீசார் ஒரு சகாக்காரரை கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தியாவிலும் இந்த சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
