சுவிட்சர்லாந்து :கிரான்ஸ்-மொன்டானா நகரில் உள்ள Le Constellation என்ற பாரில், ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. வெடிப்பு ஒன்றுக்குமேல் ஏற்பட்டதாக தகவல்கள் கூறும் நிலையில், அதன் பின் தீ வேகமாக பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் (GMT 00:30) நிகழ்ந்ததாக RTS செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. புத்தாண்டை வரவேற்க சுமார் 100 பேர் பாரில் கூடியிருந்த சமயத்தில், அடித்தளப் பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு தீப்பரவலுக்கு காரணமாக இருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் இந்த பார், அதிகபட்சமாக 400 பேரை தாங்கக்கூடிய திறன் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மண்டல நாளிதழான Le Nouvelliste வெளியிட்ட செய்தியில், “பெரும் உயிரிழப்பு” ஏற்பட்டுள்ளதாகவும், சுமார் 40 பேர் உயிரிழந்ததுடன் 100 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என்றும் அதன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவர்கள் கூட உயிரிழப்பு எண்ணிக்கை “பத்துகள்” ஆக இருக்கலாம் எனக் கூறியதாக Blick நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
Valais cantonal police அதிகாரிகள் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தாலும், அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை இன்னும் வெளியிடவில்லை. தீவிபத்து தீவிரவாத தாக்குதல் அல்ல என்றும், குற்றச் செயலாக தற்போது விசாரிக்கப்படவில்லை என்றும் போலீஸ் தெரிவித்துள்ளது. சம்பவ இடத்தில் பல ஆம்புலன்ஸ்கள் மற்றும் Air-Glaciers ஹெலிகாப்டர்கள் மீட்பு மற்றும் அவசர சிகிச்சை பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தீ விபத்திற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், நிகழ்ச்சியின் போது பயன்படுத்தப்பட்ட பைரோடெக்னிக் சாதனங்களால் தீ ஏற்பட்டிருக்கலாம் என சுவிஸ் ஊடகங்கள் ஊகிக்கின்றன. இருப்பினும், வெடிப்பின் சரியான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு காரணங்களால் கிரான்ஸ்-மொன்டானா பகுதி பொதுமக்களுக்கு முழுமையாக மூடப்பட்டுள்ளதுடன், அந்த வான்வெளியில் ‘நோ-ஃப்ளை’ மண்டலமும் அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டமாக தொடங்கிய அந்த இரவு, ஒரே நொடியில் சோகமாக மாறியதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
