ஈரான் ஒப்பந்தம் தோல்வியடைந்தால் மீண்டும் தாக்குதல் - டிரம்ப் வார்னிங்!

அணு ஆயுதத் தடை, ஹார்முஸ் நீரிணைத் திறப்பு உள்ளிட்ட நிபந்தனைகளில் எந்த மாற்றமும் இல்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Hero Image

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் எட்டப்பட்ட ஒப்பந்தம் முழுமையாக அமல்படுத்தப்படும் வரை அமெரிக்கப் படைகள் ஈரான் அருகேயே தொடர்ந்து நிலை கொண்டிருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில், “ஈரானுடன் எட்டப்பட்ட உண்மையான ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை, அமெரிக்கக் கப்பல்கள், விமானங்கள் மற்றும் ராணுவப் படைகள் அனைத்தும் ஈரான் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் நிலை கொண்டிருக்கும். ஒப்பந்தம் மீறப்பட்டால், இதுவரை யாரும் கண்டிராத அளவில் பெரிய, சக்திவாய்ந்த தாக்குதல் தொடங்கும்” என்று கூறினார்.

ஈரான் அணு ஆயுதத் தடை, ஹார்மூஸ் நீரிணை முழுமையாகத் திறப்பு உள்ளிட்ட நிபந்தனைகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் டிரம்ப் வலியுறுத்தினார். “ஈரான் அணு ஆயுதம் உருவாக்குவதை முழுமையாக நிறுத்த வேண்டும். ஹார்மூஸ் நீரிணை பாதுகாப்பாகவும் திறந்தும் இருக்க வேண்டும். இது பழைய ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது” என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹம்மது பாகர் காலிபாஃப், “போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் அணு செறிவூட்டலைத் தொடர அனுமதி உண்டு” என்று கூறியுள்ளார். இது டிரம்பின் அறிவிப்புக்கு முரணான நிலைப்பாடாகும்.டிரம்ப் மேலும் கூறுகையில், “அமெரிக்க ராணுவம் தற்போது முழு தயார் நிலையில் உள்ளது. அடுத்த வெற்றிக்காக காத்திருக்கிறது. அமெரிக்கா மீண்டும் வலிமையுடன் திரும்பியுள்ளது” என்று பெருமிதம் தெரிவித்தார்.

இருப்பினும், ஈரான் தரப்பு ஹார்மூஸ் நீரிணையில் தனது “ஆதிக்கத்தை” (dominion) தக்க வைத்துக் கொண்டே பாதுகாப்பான போக்குவரத்தை அனுமதிக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த நீரிணை உலகின் எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கை கையாளும் மிக முக்கியமான கடல் வழியாகும்.இஸ்ரேல் லெபனானில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரான் “நிரந்தர அமைதி ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை தொடர்வது நியாயமற்றது” என்று கூறியுள்ளது. இதனால் அடுத்த இரண்டு வாரங்களில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை மிகுந்த பதற்றத்துடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.