வெள்ளை மாளிகையில் டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு! என்ன நடந்தது?

ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர விரைவில் முத்தரப்பு பேச்சுவார்த்தை. ஜெலன்ஸ்கி உடனான சந்திப்புக்குப் பின் அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி தெரிவித்துள்ளார்.

Trump meet Zelensky

வாஷிங்டன் :அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் வெள்ளை மாளிகையில் முக்கியமான சந்திப்பு ஒன்றை நடத்தினார். இந்த சந்திப்பில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். இந்தக் கூட்டம், ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை மையமாகக் கொண்டு நடைபெற்றது. இதற்கு முன்னதாக, டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். ஆனால் அந்த சந்திப்பில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இந்த சந்திப்பில் பேசுகையில், போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இணைந்து உதவ வேண்டும் என வலியுறுத்தினார். “இன்று கூட ரஷ்யாவின் தாக்குதலில் ஒரு குழந்தை உயிரிழந்தது. பாதுகாப்பு உறுதி செய்யப்படாவிட்டால் உக்ரைனில் தேர்தல் நடத்த முடியாது. எந்தவொரு தலையீடும் இல்லாமல் தேர்தல் நடைபெற வேண்டும்,” என்று அவர் கூறினார்.

உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதிப்படுத்துவதற்கு வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவை என்பதை அவர் வலியுறுத்தினார்.அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த சந்திப்புக்குப் பின்னர், விரைவில் ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என உறுதியளித்தார். “இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இப்படியொரு நிலை ஏற்பட்டதில்லை. இனி இதுபோன்ற போர் நடக்கக் கூடாது. இன்னும் சற்று நேரத்தில் புடினுடன் பேச உள்ளேன், அவர் ஒத்துழைப்பார் என நம்புகிறேன். பேச்சுவார்த்தை கடினமானது, ஆனால் சாத்தியமானது,” என்று டிரம்ப் கூறினார்.

மேலும், உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்ய அடுத்த இரண்டு வாரங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.இந்த சந்திப்பில் பங்கேற்ற ஐரோப்பிய தலைவர்கள், உக்ரைனுக்கு ஆதரவாக ஒரு ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்க்கவும், உக்ரைனின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் அவர்கள் விருப்பம் தெரிவித்தனர். இந்தக் கூட்டம், உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது, மேலும் அடுத்தகட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.