யுவராஜ் சிங் ரெக்கார்டை அபிஷேக் முடித்துவிடுவார்! அடிச்சு சொல்லும் அஸ்வின்!

யுவராஜின் வேகமான டி20 அரைசதத்தை யாரவது ஒருத்தரால் முறியடிக்க முடிந்தால், அது அபிஷேக் சர்மா தான் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

abhishek sharma and ashwin

சென்னை :இந்திய அணியின் இளம் ஓப்பனர் அபிஷேக் ஷர்மா, யுவராஜ் சிங்கின் டி20 இன்டர்நேஷனல் போட்டியில் வேகமான அரைசதம் (12 பந்துகள்) என்ற சாதனையை உடைக்கும் திறன் கொண்டவர் என்று இந்தியாவின் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் குவாஹத்தி பாராபதி மைதானத்தில் அபிஷேகேக் ஷர்மா வெறும் 14 பந்துகளில் அரைசதம் விளாசியது ரசிகர்களை திகைக்க வைத்தது.

இது யுவராஜின் சாதனையை நெருங்கிய அபாரமான இன்னிங்ஸ் என்று அஷ்வின் தனது யூடியூப் சேனலில் புகழாரம் சூட்டினார்.2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக டர்பனில் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்து வரலாறு படைத்தார். அந்த சாதனை இன்னும் உடைக்கப்படாமல் இருக்கும் நிலையில், அபிஷேக் ஷர்மாவின் 14 பந்து அரைசதம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. போட்டிக்குப் பிறகு அபிஷேக் “யுவராஜ் பாஜியின் சாதனையை உடைப்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லை” என்று தாழ்மையாகக் கூறியிருந்தார்.

ஆனால் அஷ்வின் இதை ஏற்க மறுத்து, அபிஷேக் அளவுக்கு தாழ்மையாக இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.”நம் நண்பர் அபிஷேக் ஷர்மா ஒரு அறிக்கை வெளியிட்டார். யுவராஜ் பாஜியின் 12 பந்து 50-ஐ உடைப்பது மிகக் கடினம் என்று சொன்னார். அபிஷேக், இவ்வளவு தாழ்மையாக இருக்காதே. இந்தியாவில் தாழ்மையாகப் பேசினால் மக்களுக்குப் பிடிக்கும் என்பது உண்மைதான். ஆனால் இவ்வளவு தாழ்மையாக வேண்டாம். நான் சொல்கிறேன், அபிஷேக் தானே சொல்ல மாட்டார்… எதிர்காலத்தில் யுவராஜ் பாஜியின் சாதனையை உடைப்பவர் அபிஷேக் ஷர்மாதான்” என்று அஷ்வின் உற்சாகமாகப் பேசினார்.

அபிஷேக் ஷர்மாவின் பேட்டிங் ஸ்டைலைப் புகழ்ந்த அஷ்வின், பவர்ப்ளேயில் அவரது ஆக்ரோஷமான அணுகுமுறையை வியந்தார். மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் அபிஷேக் தனது இயல்பான ஆட்டத்தைத் தொடர்வதாகக் கூறினார்.

குறிப்பாக, குவாஹத்தியில் நேர் சிக்ஸர் அடித்த பிறகு அபிஷேக் தனது பேட்டைப் பார்த்ததை சுட்டிக்காட்டிய அஷ்வின், “பந்து பேட்டின் கீழ்ப்பகுதியில் பட்டும் சிக்ஸருக்கு சென்றது. அவரது பேட் ஸ்விங், பவர் எல்லாம் அபாரம்” என்று பாராட்டினார்.”இவர் கடவுளின் சொந்தக் குழந்தை. இவருக்கு என்ன புகழுரை சொல்வது? அவரது பேட்டிங் நம்ப முடியாத அளவுக்கு அற்புதம்” என்று அஷ்வின் உருக்கமாகப் பேசினார்.

அபிஷேக் ஷர்மாவின் தொடர் சிறப்பான ஆட்டம் இந்திய அணியின் டி20 எதிர்காலத்துக்கு பெரும் நம்பிக்கை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டி நடைபெறவுள்ள நிலையில், அபிஷேக் ஷர்மாவின் பார்ம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அஷ்வினின் இந்த பாராட்டு அபிஷேக்குக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் இளம் வீரர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வரும் நிலையில், யுவராஜின் ரெகார்டு உடைக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது போல் தெரிகிறது.