இரட்டை சதம் விளாசி கிங் கோலி சாதனையை முறியடித்த கில்! புகழ்ந்து தள்ளிய கங்குலி!
இங்கிலாந்துக்கு எதிராக இரட்டை சதம் விளாசி முன்னாள் வீரர் விராட் கோலி சாதனையை இந்திய கேப்டன் கில் முறியடித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி “முழுமையான மாஸ்டர்கிளாஸ்” என்று பாராட்டியுள்ளார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்து, இங்கிலாந்தை 77/3 என்ற நிலையில் 510 ரன்கள் பின்தங்கிய நிலைக்கு தள்ளியது. இந்த அளவுக்கு இந்திய சிறப்பான ரன்களை குவிக்க காரணமே கில்லின் இந்தப் புரட்சிகரமான 269 ரன்கள் தான்.
இந்த இரட்டை சதங்கள் மூலம் கில் இந்திய கேப்டனாக இங்கிலாந்து மண்ணில் அதிகபட்ச ரன்கள் என்ற விராட் கோலியின் 254* சாதனையை முறியடித்தார். கங்குலி, எக்ஸ் தளத்தில் கில்லை பாராட்டி, “கில்லிடமிருந்து முழுமையான மாஸ்டர்கிளாஸ்… குறைவற்ற ஆட்டம். இங்கிலாந்தில் எந்த காலகட்டத்திலும் நான் பார்த்த சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. கடந்த சில மாதங்களில் அபார முன்னேற்றம். டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரர் இடம் அவருக்கு இல்லை,” என்று பதிவிட்டார்.
இந்தப் போட்டியில், கில் முதல் நாள் முடிவில் 114 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து, இரண்டாவது நாளில் 269 ரன்கள் வரை குவித்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் (87) மற்றும் ரவீந்திர ஜடேஜா (89) ஆகியோரின் ஆதரவுடன், கில் 203 ரன்கள் கொண்ட ஆறாவது விக்கெட் கூட்டணியை அமைத்தார். இந்த இன்னிங்ஸ், இங்கிலாந்தில் இந்திய அணியின் நான்காவது அதிகபட்ச மொத்த ரன்களாகவும், எட்ஜ்பாஸ்டனில் இந்திய கேப்டனாக அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையையும் பதிவு செய்தது.
கங்குலி, இந்த டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு என்று கூறினார். “இந்த டெஸ்ட் இந்தியாவுக்கு வெற்றி பெறுவதற்கானது,” என்று அவர் தெரிவித்தார். கில்லின் இந்த ஆட்டம், இந்திய அணியை முதல் டெஸ்ட் தோல்வியில் இருந்து மீளவைத்து, தொடரை சமன் செய்யும் நிலைமயை கொண்டு வரும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நம்பிக்கை ஏற்படுத்தியதை போல வெற்றிபெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.