GT vs RR: யாருக்கு கிடைக்கும் ஹாட்ரிக்? இன்று ராஜஸ்தான் – குஜராத் அணிகள் பலப்பரீட்சை.!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் மோதுகிறது. ஜெய்ப்பூரில் நடைபெறும் போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

GT Vs RR

ஜெய்ப்பூர் :ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் – குஜராத் அணிகள் மோதுகின்றனர். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெறும் போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஹாட்ரிக் வெற்றியை பெற குஜராத் அணியும், ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க ராஜஸ்தான் அணியும் போராடும் என்பதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும்.

6 போட்டிகளில் வென்றுள்ள குஜராத், இன்றிரவு வாகை சூடினால் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் செல்ல வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ள ராஜஸ்தான் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு ஏறக்குறைய பறிபோய்விட்டது.

கடைசியாக, ரியான் பராக் தலைமையிலான அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியிடம் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, தற்போது புள்ளிகள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. ஒன்பது போட்டிகளில் ராயல்ஸ் அணி இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.

இதற்கு நேர்மாறாக, கடந்த திங்கட்கிழமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆதிக்க வெற்றியின் மூலம் குஜராத் அணி, எட்டு போட்டிகளில் ஆறாவது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே இதுவரை 7 போட்டிகள் நடந்துள்ளன. இதில், குஜராத் டைட்டன்ஸ் 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள இன்றைய ஆட்டத்தில் வெல்லப் போவது யார்? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.