டெல்லி : ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி, ஏற்கனவே தகுதி பெற்றுள்ள பெங்களுர் அணியை சந்திக்க உள்ளது.
புதிய சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் பிசிஏ ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக வெளியேற்ற சுற்றில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி உற்சாகத்துடன் வரும் ராஜஸ்தான் அணி, முதல் தகுதிச்சுற்றில் பெங்களூருவிடம் படுதோல்வி அடைந்த குஜராத் அணிக்கும் இது வாழ்வா, சாவா போட்டியாக மாறியுள்ளது.
சூர்யவன்ஷி மீது நம்பிக்கை
ராஜஸ்தான் அணியின் மிகப்பெரிய பலமாக 15 வயது இளம் நட்சத்திரம் வைபவ் சூரியவன்ஷி திகழ்கிறார். இந்த சீசனில் 680 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை தக்க வைத்துள்ள அவர், எதிரணிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளார்.
வெளியேற்ற சுற்றில் ஹைதராபாத் அணிக்கு எதிராக வெறும் 29 பந்துகளில் 97 ரன்கள் விளாசிய அவரது அதிரடி இந்த ரசிகர்கள் மனதில் உள்ளது. அவருடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல் ஆகியோர் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினால் ராஜஸ்தான் அணி வலுவான ஸ்கோரை எட்டும்.
மீண்டும் வருமா குஜராத்?
முதல் தகுதிச்சுற்றில் பெங்களூருவிடம் 92 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த குஜராத் அணி, இந்தப் போட்டியில் மீண்டும் வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்தப் போட்டியில் 255 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத், 162 ரன்களுக்கு சுருண்டது.
அந்தப் போட்டியில் ராகுல் தெவாடியா மட்டும் 68 ரன்கள் எடுத்து போராடினார். இன்று அணியின் நம்பிக்கை முழுவதும் ஷுப்மன் கில், சாய் சுதர்சன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் பேட்டிங்கில்தான் உள்ளது.
நேருக்கு நேர் சாதனை
இதுவரை இரு அணிகளும் 42 முறை மோதிய நிலையில், குஜராத் 23 போட்டிகளிலும், ராஜஸ்தான் 18 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் குஜராத் அணிக்கே சாதனை அடிப்படையில் சிறிய முன்னிலை உள்ளது.
அதே நேரத்தில், தற்போதைய ஆட்டநிலை, சூர்யவன்ஷியின் அதிரடி, வெளியேற்ற சுற்றில் கிடைத்த வெற்றி ஆகியவை ராஜஸ்தான் அணிக்கு கூடுதல் தன்னம்பிக்கையை வழங்கியுள்ளன.
யாருக்கு அதிக வெற்றி வாய்ப்பு?
தற்போதைய நிலவரப்படி:
ராஜஸ்தான் ராயல்ஸ் – 52% வெற்றி வாய்ப்பு
குஜராத் டைட்டன்ஸ் – 48% வெற்றி வாய்ப்பு
சூர்யவன்ஷியை குஜராத் பந்துவீச்சாளர்கள் விரைவாக வெளியேற்றினால் போட்டி அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் செல்லலாம். ஆனால் அவர் நீண்ட நேரம் களத்தில் நின்றால், ராஜஸ்தான் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைய வாய்ப்பு உள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, ஐபிஎல் 2026 கோப்பைக்காக பெங்களூருவை எதிர்கொள்ளும் என்பதால், ரசிகர்கள் அவளுடன் காத்திருக்கின்றனர்.
