அவரை காப்பி அடிப்பது முட்டாள்தனம்...சூர்யவன்ஷி குறித்து படிக்கல்!

அவரைப் போல விளையாட முயற்சிப்பது முட்டாள்தனம் என படிக்கல் தெரிவித்துள்ளார்.

Hero Image

டெல்லி : ஐபிஎல் 2026 தொடரில் இளம் அதிரடி வீரராக ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வரும் வைபவ் சூர்யவன்ஷி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் தேவ்தத் படிக்கல் பாராட்டு தெரிவித்துள்ளார். குறிப்பாக, “அவரைப் போல விளையாட முயற்சிப்பது முட்டாள்தனம்” என்று கூறியுள்ள அவரது கருத்து தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இந்த சீசனில் வெறும் 15 வயதிலேயே அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வரும் வைபவ் சூர்யவன்ஷி, 12 போட்டிகளில் 579 ரன்கள் குவித்து அசத்தி வருகிறார். சராசரியாக 44.53 ரன்கள் எடுத்துள்ள அவர், இந்த தொடரின் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தற்போது 3வது இடத்தில் உள்ளார்.

வைபவ் குறித்து பேசிய தேவ்தத் படிக்கல், “அவருடைய பேட்டிங் மிகவும் வித்தியாசமானது. அந்த வயதில் இவ்வளவு power மற்றும் explosiveness-ஓடு விளையாடுவது சாதாரண விஷயம் கிடையாது. உண்மையாக சொல்ல வேண்டும் என்றால், அவரைப் போல விளையாட முயற்சிப்பது முட்டாள்தனமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “வைபவ் ஒரு அரிய திறமை கொண்ட வீரர். அவர் செய்வது நம்ப முடியாத அளவுக்கு சிறப்பானது. நான் என்னை வேறு யாருடனும் ஒப்பிட மாட்டேன். இந்த தொடரில் நிறைய திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். அதனால், என் பலங்களை மட்டும் கவனித்து, என் ஆட்டத்தை தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள தான் முயற்சி செய்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.

தேவ்தத் படிக்கலும் இந்த சீசனில் பெங்களூரு அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 12 இன்னிங்ஸ்களில் 412 ரன்கள் எடுத்துள்ள அவர், 37.45 சராசரியிலும் 173.10 strike rate-உடனும் விளையாடி வருகிறார். மேலும், இந்த சீசனில் 3 அரைசதங்களும் அடித்துள்ளார்.

இதற்கிடையில், ஐபிஎல் 2026 தொடரின் 67வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நாளை மோத உள்ளன. இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.

ஹைதராபாத் அணியை பொறுத்தவரை, இந்த போட்டி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் நேரடியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு உறுதியாகும். தோல்வியடைந்தாலும் மற்ற போட்டிகளின் முடிவுகளை நம்பி காத்திருக்க வேண்டிய நிலை உருவாகும்.

மறுபுறம், நடப்பு சாம்பியனான ஆர்சிபி ஏற்கனவே ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. தற்போது top-2 இடத்தை உறுதி செய்யும் நோக்கில் அணி விளையாட உள்ளது. ஹைதராபாத் அணியை வீழ்த்தினால், ப்ளே ஆப் சுற்றில் கூடுதல் வாய்ப்பு கிடைக்கும் என்பதால், இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.