டெல்லி :ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக, அணிகள் பல வீரர்களை ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்துள்ளன. இது அணிகளின் புதிய திட்டங்களை உருவாக்க உதவும். இந்த டிரேட்களில் மிக முக்கியமானது சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) இடையே நடந்தது. CSK-இன் ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் RR-க்கு செல்கின்றனர். அதற்கு பதிலாக RR-இன் கேப்டன் சஞ்சு சாம்சன் CSK-இல் சேர்கிறார். இது போன்ற பல டிரேட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ரவீந்திர ஜடேஜா 2012 முதல் CSK-இல் இருந்து வந்தார். அவர் 250-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி 150 விக்கெட்டுகளும் 2,300 ரன்களும் எடுத்துள்ளார். மூன்று முறை சாம்பியன் அணியில் முக்கியமானவராக இருந்தார். இப்போது அவரது சம்பளம் ரூ.18 கோடியிலிருந்து ரூ.14 கோடியாக குறைக்கப்பட்டு RR-க்கு செல்கிறார்.
அதைப்போல, சஞ்சு சாம்சன் RR-இல் 11 ஆண்டுகள் கேப்டனாக இருந்து 4,500 ரன்கள் அடித்துள்ளார். அவர் ரூ.18 கோடி சம்பளத்தில் CSK-இல் சேர்கிறார். சாம் கர்ரன் 64 போட்டிகளில் 356 ரன்களும் 23 விக்கெட்டுகளும் எடுத்து ரூ.2.4 கோடியில் RR-க்கு செல்கிறார்.
மற்றொரு முக்கிய டிரேட் என்னவென்றால், முகமது ஷமி சுன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில் இருந்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் செல்கிறார். ரூ.10 கோடி சம்பளத்தில் 119 போட்டிகளில் விளையாடிய அவர் 2023-ல் 28 விக்கெட்டுகளுடன் பர்ப்பிள் கேப் வென்றவர். மாயங்க் மார்கான்டே கொல்கத்தாவில் இருந்து மும்பை இந்தியன்ஸுக்கு ரூ.30 லட்சத்தில் திரும்புகிறார். அவர் 37 போட்டிகளில் 37 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
அதைப்போல, அர்ஜுன் டெண்டுல்கர் மும்பையில் இருந்து லக்னோவுக்கு ரூ.30 லட்சத்தில் செல்கிறார். அவர் 2023-ல் IPL டெப்யூ செய்தவர். நிதீஷ் ராணா ராஜஸ்தானில் இருந்து டெல்லி கேபிடல்ஸுக்கு ரூ.4.2 கோடியில் செல்கிறார். அவர் 100-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியவர். டோனோவன் ஃபெர்ரேரா டெல்லியில் இருந்து ராஜஸ்தானுக்கு ரூ.1 கோடியில் திரும்புகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
