டெல்லி :இந்திய அணியின் 2026 டி20 உலகக் கோப்பை அணி தேர்வு குறித்து முன்னாள் பிசிசிஐ தலைமை தேர்வுக்குழு உறுப்பினர் திலீப் வெங்சர்கர் கருத்து தெரிவித்துள்ளார். ஷுப்மன் கில் இடத்துக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெற தகுதியானவர் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 2024 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பெற்றிருந்தாலும், விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஓப்பனிங் செய்ததால் அவருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஜூலை 2024க்குப் பிறகு யஷஸ்வி டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடவில்லை. இருப்பினும், அபிஷேக் ஷர்மாவுடன் ஓப்பனிங் செய்ய யஷஸ்வி ஏற்றவர் என்று பல ரசிகர்களும் நிபுணர்களும் கருதுகின்றனர்.திலீப் வெங்சர்கர் Sportskeeda-விடம் பேசியதாவது: “அனைவரும் சிறந்த வீரர்கள்தான். ஆனால் தேர்வுக்குழு தற்போதைய ஃபார்ம் மற்றும் உடற்தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்வதை நான் ஆதரிக்கிறேன்.
தற்போதைய ஃபார்ம் மிக முக்கியம். கில்லுக்கு பதிலாக யாரை தேர்வு செய்திருப்பேன் என்றால், யஷஸ்வி ஜெய்ஸ்வால்தான். அவர் தனது தரமான ஆட்டத்தை பலமுறை நிரூபித்துள்ளார். இன்றைய டி20 கிரிக்கெட்டுக்கு தேவையான வேகமான தொடக்கத்தை அவர் அளிப்பார்” என்று கூறினார்.“யஷஸ்வி தொடர்ந்து அனைத்து ஃபார்மெட்களிலும் அபார ஃபார்மில் உள்ளார்.
அவரை தொடர்ந்து விடுவது துரதிர்ஷ்டவசமானது. அவர் என்ன செய்தாலும் அணிக்குள் இடம் பெற முடியவில்லை. போட்டி வென்று தரக்கூடிய வீரரை அணியில் இருந்து விட முடியாது” என்று வெங்சர்கர் வருத்தம் தெரிவித்தார்.இந்த கருத்து இந்திய அணியின் டி20 தேர்வு குறித்த விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. யஷஸ்வியின் சீரான ஃபார்ம் அவருக்கு அணியில் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தியுள்ளது. 2026 உலகக் கோப்பைக்கான அணி தேர்வில் இது முக்கிய காரணியாக அமையலாம் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
