விராட் -ரோஹித் கூட ஆடுறதே தனி பீஃல்! நெகிழும் திலக் வர்மா!

விராட் பாயிடம் அதிகம் பேசுவேன் – குறிப்பாக ஃபிட்னஸ் மற்றும் விக்கெட்களுக்கு இடையே ஓடுவது பற்றி என திலக் வர்மா தெரிவித்துள்ளார்.

Featured image

டெல்லி :இந்திய அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேன் திலக் வர்மா (23), ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருடன் ஒரே டிரஸ்ஸிங் ரூமில் இருப்பது தனக்கு புதிய தன்னம்பிக்கையை அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா டூரில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ள திலக், “ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் தான் என் விளையாட்டுக்கு சரியாகப் பொருந்துகின்றன. நீண்ட ஃபார்மெட் எனக்கு ரொம்பப் பிடிக்கும்” என்று உற்சாகமாகக் கூறினார்.

இதுவரை 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், ஒரு அரைசதம் அடித்துள்ளார். ரோஹித் மற்றும் கோலி ஆகியோருடன் இருப்பது தனது நம்பிக்கை அளவை முற்றிலும் மாற்றிவிட்டதாக திலக் கூறுகிறார். “ரோஹித் பாய், விராட் பாய் இருவரும் ஒரே அணியில் இருக்கும்போது நம்பிக்கை லெவல் வேற லெவல். அவர்களிடம் இருந்து அதிகமாகக் கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறேன். அவர்களது அனுபவமும் அறிவும் எனக்கு மிகப் பெரிய பாடம்” என்று ஜியோஸ்டார் நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார்.

சர்வதேச கிரிக்கெட்டின் தேவைகளை நெருக்கமாகப் புரிந்துகொள்ள இந்த உரையாடல்கள் உதவுவதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக விராட் கோலியுடனான உரையாடல்கள் திலக்கின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளன. “விராட் பாயிடம் அதிகம் பேசுவேன் – குறிப்பாக ஃபிட்னஸ் மற்றும் விக்கெட்களுக்கு இடையே ஓடுவது பற்றி. அவரது தீவிரம் (intensity) அபாரமானது. நானும் ஓடுவதை ரொம்ப விரும்புவேன், என்னால் வேகமாக ஓட முடியும். அதனால் அந்த பகுதியை ரொம்ப ரசிக்கிறேன்” என்று கூறினார்.

கோலியின் ஒவ்வொரு சிங்கிளையும் கூர்மையாக எடுப்பது, இன்னிங்ஸின் டெம்போவைத் தக்கவைப்பது போன்ற அணுகுமுறைகள் திலக்கின் விளையாட்டையும் மாற்றியுள்ளன.”விராட் பாயுடன் அதிகம் பேட்டிங் செய்ய வேண்டும் என்று ஆசை. அவருடன் விக்கெட்களுக்கு இடையே ஓடுவது ஒரு சூப்பர் அனுபவமாக இருக்கும்” என்று திலக் உற்சாகமாகக் கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் போட்டியை முடிக்கும் வகையில் பயன்படுத்த விரும்புகிறேன். ஒருநாள் மற்றும் டெஸ்ட்டில் என்னை நிரூபிக்க வேண்டும். நீண்ட ஃபார்மெட்டில் சிறப்பாகச் செயல்பட்டு, தனிப்பட்ட முறையில் வளர வேண்டும் என்று என்னை சவால் விடுகிறேன்” என்று திலக் வர்மா உறுதியாகக் கூறியுள்ளார். ரோஹித்-கோலி போன்ற ஜாம்பவான்களுடன் இருக்கும் இந்த இளம் வீரரின் பயணம் இந்திய ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.