“அதிக ரிஸ்க் – அதிக வெற்றிகள் : இதுதான் இனி எங்கள் பாதை” கம்பீர் அதிரடி!

அதிக ரிஸ்க், அதிக வெற்றிகள் எனும் வகையிலான கிரிக்கெட்டை நாங்கள் விளையாட விரும்புகிறோம். இந்த சித்தாந்தத்தை வீரர்கள் நன்றாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

Indian cricketer Abishek Sharma - Indian cricket team head couch Goutam Gambhir

மும்பை : நேற்று இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய 5வது டி20 போட்டியானது, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அதனை பார்த்த பலருக்கும் சற்று குழப்பம் வந்திருக்கும். நாம் உண்மையில் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி தான் பார்கிறோமா?அல்லது உள்ளூர் ஐபிஎல் போன்ற டி20  போட்டியை பார்கிறோமா என்று, அந்தளவுக்கு இந்திய அணி இங்கிலாந்தை பந்தாடி 150 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை ருசித்தது.

மிரட்டிய அபிஷேக் சர்மா :

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 54 பந்துகளில் 135 ரன்கள் விளாசினார். இதில் 7 பவுண்டரி 13 சிக்ஸர்கள் அடங்கும். ஸ்ட்ரைக் ரேட் 250 என இங்கிலாந்து பவுலர்களை ஆட்டம் காண வைத்தார் அபிஷேக் சர்மா. அதே போல, பவுலிங்கிலும் இந்திய அணி  மிரட்டியது. 10.3 ஓவர்களில் 97 ரன்களுக்கே இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தொடர் நாயகன் வருண் :

இதன் மூலம் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4 வெற்றிகளுடன் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. 5வது டி20 போட்டியின் ஆட்ட நாயகன் விருதை அபிஷேக் சர்மாவும், தொடர் நாயகன் விருதை வருண் சக்கரவர்த்தியும் பெற்றனர். இந்த டி20 தொடர் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார்.

கௌதம் கம்பீர் பேட்டி :

அவர் கூறுகையில், நாங்கள் சர்வதேச டி20 போட்டியில் உள்ள ரன் எல்லைகளை அதிகப்படுத்த முயற்சிக்கிறோம். அதிக ரன்களை இலக்காக வைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். சராசரியாக 250 – 260 ரன்களை குவிக்கவே விரும்புகிறோம்.  இதே பாணியை தான் புனேயில் நடந்த 4வது T20I போட்டியிலும் இந்திய வீரர்கள் செயல்படுத்தினர். தொடர் விக்கட்டுகளை இழந்த போதிலும் இங்கிலாந்தின் பந்துவீச்சை பவுண்டரிகளுக்கு விரட்டிக் கொண்டே இருந்தார்கள். அதனால் தான், இறுதியில் 9 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 181 ரன்கள் எடுத்தது.

அதிக ரிஸ்க் – அதிக வெற்றிகள் :

இதுபோன்ற டி20 கிரிக்கெட்டைத்தான் நாங்கள் விளையாட விரும்புகிறோம். இந்த பாணியில் விளையாடுவதால் தோற்று விடுவோமோ என்று நாங்கள் பயப்படவில்லை. “அதிக ரிஸ்க், அதிக வெற்றிகள்” எனும் வகையிலான கிரிக்கெட்டை தான் நாங்கள் விளையாட விரும்புகிறோம். இந்த சித்தாந்தத்தை வீரர்கள் நன்றாக ஏற்றுக்கொண்டுள்ளனர். ” என கம்பீர் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆட்டத்திலும் 250 ரன்களுக்கு அருகாமையில் உயரமான இலக்குகளை பதிவு செய்ய விரும்புவதாகவும், சில போட்டிகளில் குறைந்த ஸ்கோருக்கு அவுட்டாவதைப் நாங்கள் பொருட்படுத்தவில்லை என்றும் கம்பீர் கூறினார்.

இனி எங்கள் பாதை..,

மேலும், ” அதிக ரிஸ்க் உடன் டி20 கிரிக்கெட்டை ஒரு அணி விளையாடாத வரையில், அந்த அணி பெரிய வெற்றிகளை பெற மாட்டார்கள். நாங்கள் இப்போது  சரியான பாதையில் செல்கிறோம் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் இதே போன்று தொடர்ந்து விளையாட விரும்புகிறோம். தோற்றுவிடுவோமோ என்று பயந்து விளையாட விரும்பவில்லை.

இந்த டி20 விளையாட்டு பாணி அச்சமின்மையை அடிப்படையாகக் கொண்டது. கடந்த ஆறு மாதங்களில், இவர்கள் அதை தினம், தினம் செய்திருக்கிறார்கள். அபிஷேக் ஷர்மா போன்ற வீரர்களை நாங்கள் இன்னும் அதிகமாக ஆதரிக்க விரும்புகிறோம். இந்த இளம் வீரர்களுடன் நாங்கள் இணக்கமாக இருக்க வேண்டும். தொடர்ந்து 140-150 கிமீ வேகத்தில் வீசும் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஒரு சிறந்த டி20 சதத்தை நான் இதுவரை பார்த்ததில்லை.

வருண் – முக்கிய அடையாளம் :

சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தன்னை மீண்டும் நிரூபித்து சர்வதேச கிரிக்கெட்டுக்கு வலுவாக திரும்பியுள்ளார். ஐபிஎல்லில் இருந்து சர்வதேச டி20 கிரிக்கெட்டுக்கு அவரது மாற்றம் அபரிமிதமானது என்று நான் நினைக்கிறேன். இங்கிலாந்து எனும் பெரிய அணிக்கு எதிராக வருண்  சிறப்பாக செயல்பட்டது அவரது கேரியருக்கு முக்கிய அடையாளமாக இருக்கலாம்.

இந்திய அணிக்கு உண்மையிலேயே தரமான கிரிக்கெட் வீரர்கள் கிடைத்துள்ளனர். நாங்கள் விளையாடிய மைதானங்கள்  பேட்டர்களுக்கு ஏற்றது. அந்த மைதானத்திலும் கடினமான ஓவர்களை வருண் சக்கரவர்த்தி வீசிய விதம் தனித்துவமானது. அவர்கள் (அபிஷேக் சர்மா, வருண் சக்கரவர்த்தி) ஒருவருக்கொருவர் எதிராக நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். உங்கள் பாதையில் நீங்கள் செல்லத் தொடங்கும் போது, ​​​​எல்லாம் சரியாக நடக்கும். 140-150 கோடி இந்தியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது என்றால் என்ன என்பது எங்கள் வீரர்களுக்குத் தெரியும்,” என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்