4-வது இடம் யாருக்கு? ப்ளே ஆப் முனைப்பில் ராஜஸ்தான்!

லக்னோவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை 50 % உறுதி செய்துள்ளது ராஜஸ்தான் அணி.

Hero Image

ஜெய்ப்பூர் : சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற IPL 2026 போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் செயல்பட்டார். ரியான் பராக் hamstring காயம் காரணமாக போட்டியில் விளையாடவில்லை. டாஸ் வென்ற யஷஸ்வி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆனால் அந்த முடிவு ஆரம்பத்தில் ராஜஸ்தானுக்கு சாதகமாக அமையவில்லை.

லக்னோ அணிக்காக தொடக்க வீரர்களாக களமிறங்கிய மிட்செல் மார்ஷ் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியாக விளையாடி ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களை கடுமையாக தாக்கினர். இருவரும் சேர்ந்து முதல் 9 ஓவர்களிலேயே 109 ரன்கள் சேர்த்தனர்.

ஜோஷ் இங்கிலிஸ் வெறும் 29 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் நிக்கோலஸ் பூரனும் சில பெரிய ஷாட்கள் அடித்தாலும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

மற்றொரு புறம் மிட்செல் மார்ஷ் தொடர்ந்து அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். கேப்டன் ரிஷப் பந்தும் தனது ஸ்டைலில் சில அசத்தலான ஷாட்கள் அடித்து 23 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். இருவரும் இணைந்து முக்கிய கூட்டணியை அமைத்தனர்.

இறுதிக்கட்டத்தில் சில ஓவர்களில் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினாலும், லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரை பதிவு செய்தது. மிட்செல் மார்ஷ் 57 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து கடைசி வரை ராஜஸ்தானுக்கு பெரிய சவாலாக இருந்தார். அவரது இன்னிங்சில் 11 பவுண்டரிகளும் 5 சிக்சர்களும் இடம்பெற்றன.

221 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடி தொடக்கம் கொடுத்தார். ஆரம்பம் முதலே பவுண்டரிகள் அடித்து லக்னோ பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தார்.

மறுபுறம் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆரம்பத்தில் சற்று பொறுமையாக விளையாடினார். ஆனால் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 7வது ஓவரில் அவுட்டான பிறகு, சூர்யவன்ஷி முழுமையாக அதிரடிக்கு மாறினார்.

அதன்பிறகு துருவ் ஜுரேலுடன் இணைந்து சூர்யவன்ஷி போட்டியின் போக்கையே மாற்றினார். இருவரும் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் கூட்டணி அமைத்தனர்.குறிப்பாக சூர்யவன்ஷி லக்னோ பந்துவீச்சாளர்களை சிதறடித்து 38 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து ரசிகர்களை மிரள வைத்தார். அவரது இன்னிங்ஸ் 14வது ஓவரில் முடிந்தாலும், அதற்குள் ராஜஸ்தான் அணி 180 ரன்களை கடந்திருந்தது.

இறுதியில் ராஜஸ்தான் அணி எளிதாக இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது 7 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் நீடித்து வருகிறது.

மேலும், வரும் மே 24ஆம் தேதி நடைபெறும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டி ராஜஸ்தானுக்கு மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. அந்த போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகும். ஒருவேளை ராஜஸ்தான் தோல்வியடைந்தால் மட்டுமே மற்ற அணிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.

4-வது இடம் யாருக்கு? ப்ளே ஆப் முனைப்பில் ராஜஸ்தான்!