முக்கிய ஒப்பந்தங்கள் இந்தியா-பாலஸ்தீன் இடையே கையெழுத்து!

பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், பிரதமர் மோடி  பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாடுகளிடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அமைதியான முறையில் பாலஸ்தீனம் விரைவில்

பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், பிரதமர் மோடி  பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாடுகளிடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அமைதியான முறையில் பாலஸ்தீனம் விரைவில் சுதந்திர நாடாக மாறும் என இந்தியா நம்புவதாக பிரதமர் மோடி கூறினார்.

மேற்காசிய மற்றும் வளைகுடா நாடுகளுக்கு 4 நாள் அரசு முறை சுற்றுப் பயணமாக வெள்ளிக்கிழமை ஜோர்டான் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு மன்னர் 2-ஆம் அப்துல்லாவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் ஜோர்டானின் அம்மான் நகரில் இருந்து பாலஸ்தீனத்தின் ரமல்லா நகருக்கு, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி சனிக்கிழமை புறப்பட்டார். அவருக்கு இஸ்ரேல் ராணுவ ஹெலிகாப்டர்களும், ஜோர்டான் மன்னரின் பாதுகாப்பு ஹெலிகாப்டர்களும் பாதுகாப்புக்குச் சென்றன.

பாலஸ்தீனத்தின் ரமல்லா நகரை அடைந்த பிரதமர் மோடிக்கு, அங்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

பின்னர் ரமல்லாவில் உள்ள யாசர் அராஃபத்தின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாசும், பிரதமர் மோடியும் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுநடத்தினர். அப்போது, வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வழங்கப்படும் உயரிய கவுரமான ‘கிராண்ட் காலர்’ என்ற கவுரவத்தை பிரதமர் மோடிக்கு அளித்த பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், அதற்கான தங்க ஆபரணம் ஒன்றையும் அணிவித்தார்.

இதையடுத்து, இரு தலைவர்கள் முன்னிலையில், பாலஸ்தீனத்தின் பெய்ட் சஹூர் (Beit sahur) பகுதியில் 192 கோடி ரூபாய் மதிப்பில், பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைப்பது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், 32 கோடி ரூபாய் மதிப்பில் மகளிர் மேம்பாட்டு மையம் அமைத்தல் உள்பட இருநாடுகளுக்கு இடையே 320 கோடி ரூபாய் மதிப்பிலான 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இந்த ஒப்பந்தங்களை பிரதமர் மோடி, பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் ஆகியோர் முன்னிலையில் அதிகாரிகள் பரிமாறிக் கொண்டனர்.

பின்னர் பிரதமர் மோடியும், பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாசும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், பாலஸ்தீனத்தின் அமைதிக்காக இந்திய தலைவர்கள் எப்போதும் ஆதரவாக இருப்பதாக கூறினார். தங்கள் பகுதியில் அமைதி நிலவ, சர்வதேச அளவில் இந்தியாவின் பங்கை தாங்கள் சார்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய பிரதமர் மோடி, பாலஸ்தீனத்தில் தமக்கு அளிக்கப்பட்ட மரியாதையை இருநாடுகளின் நட்புறவின் அடையாளம் என்ற குறிப்பிட்டார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் பாலஸ்தீனத்துக்கு எப்போதும் உயர்ந்த இடம் வழங்கப்படுவதாக கூறினார். நிலையற்ற மற்றும் கடுமையான காலகட்டத்திலும் பாலஸ்தீன மக்கள் தங்கள் தைரியத்தை வெளிப்படுத்தி வந்ததாக கூறிய பிரதமர் மோடி, இதனால், பாலஸ்தீனம் முன்னோக்கி நகர்ந்துள்ளது பாராட்டுக்குரியது என்றும் குறிப்பிட்டார்.

இந்த பயணத்தின் மூலம் இருதரப்பு உறவுகள் மேலும் பலப்படும் என நம்புவதாகவும், இந்த ஆண்டு முதல் இந்தியா – பாலஸ்தீனம் இடையிலான மாணவர் பரிவர்த்தனை இரட்டிப்பாகப்படுவதாகவும் பிரதமர் மோடி அறிவித்தார். பாலஸ்தீன மக்களின் நலன்களை பாதுகாக்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாக கூறிய அவர், பாலஸ்தீனம் விரைவில் அமைதியான முறையில் சுதந்திர நாடாக மாறும் என நம்புவதாக தெரிவித்தார். பேச்சுவார்த்தைகள் மூலம் நிலையான தீர்வை எட்டமுடியும் என நம்புவதாக கூறிய பிரதமர் மோடி, வன்முறைகள் மற்றும் கடந்த கால நிகழ்வுகளை மறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பாலஸ்தீன பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, தனி விமானத்தில் அபுதாபிக்கு புறப்பட்டுச் சென்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.