“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!
சிறுபான்மையின மக்களின் உரிமைக்காக தமிழக வெற்றிக்கழகம் என்றும் முதன்மைச் சக்தியாக களத்தில் நிற்கும் என்று தவெக தலைவர் விஜய் உறுதியளித்துள்ளார்.

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும் ஜனநாயகப் பொறுப்பில் தவெக முதன்மை சக்தியாக இருக்கும் என்று தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ”ஒன்றிய பாஜக அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம், இஸ்லாமியச் சகோதரர்களின் உரிமையில் நேரடியாகத் தலையிட்டது. இது, இதர சிறுபான்மையினர் நலன் மற்றும் அரசியலமைப்பைப் பாதிக்கும் மறைமுக ஆபத்தையும் கொண்டது. இதனை உணர்ந்தே தமிழக வெற்றிக் கழகம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்துக்கொண்டிருக்கும் தலைமை நீதிபதி அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, ‘வக்ஃப் என்று ஏற்கெனவே பதியப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள சொத்துகள் மற்றும் பயன்பாடு அடிப்படையில் இருக்கும் வக்ஃப் சொத்துக்கள் (waqf by user) மீது, புதிய திருத்தச் சட்டத்தின்படி நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது. மாவட்ட ஆட்சியர் எந்தவிதப் புதிய நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது என்று வரவேற்கத்தக்க வகையில் இடைக்காலமாக நிறுத்திவைத்து உத்தரவிட்டது.
பின்னர் மேற்கொண்ட விசாரணையிலும் இந்த நிறுத்திவைப்பு உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது. வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் கிடைத்த முதல் வெற்றியாகும்.
குறிப்பாக, நமது தமிழக வெற்றிக் கழகத்திற்காக வாதாடிய, மூத்த வழக்கறிஞர் திரு. அபிஷேக் சிங்வி அவர்கள், அரசியலமைப்பின் அடிப்படை விதிகளைக் கோடிட்டுக் காட்டியும், மதத் தனியுரிமைச் சட்டங்களில் இதுவரை நீதி அமைப்புகள் மேற்கொண்ட வரலாற்று நிலைப்பாடுகளை விளக்கியும் வாதிட்டார்.
மேலும், இந்தத் திருத்தச் சட்டத்தில் அரசியலமைப்புச் சட்டக் கூறுகள் 14, 15, 19, 25, 26 மற்றும் 29 போன்றவையும், இஸ்லாமியர்களின் மதத் தனியுரிமைச் சட்டங்களும் நேரடியாகக் கேள்விக்குள்ளாகின்றன என்பதை எடுத்துக் காட்டினார். எனவே. இந்த இடைக்கால நடவடிக்கையில் நமது தமிழக வெற்றிக் கழகம் முக்கியப் பங்காற்றியது என்பதைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.