ஹைதராபாத் : ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் தனது புதிய Hero ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் 2.0 (Super Splendor XTEC 2.0) மோட்டார் சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய தோற்றம், அதிக மைலேஜ் மற்றும் பல புதிய வசதிகளுடன் வந்துள்ள இந்த பைக் தற்போது 125சிசி பிரிவில் அதிக கவனம் ஈர்த்து வருகிறது.எனவே இதனுடைய விலை எவ்வளவு மற்ற சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
புதிய தோற்றத்தில் சூப்பர் ஸ்பிளெண்டர்
புதிய சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் 2.0 பைக்கில் அதிகமான மாற்றங்கள் அதன் வெளிப்புற வடிவமைப்பிலேயே செய்யப்பட்டுள்ளன. டூயல் டோன் கிராபிக்ஸ், புதிய எக்ஸ்டெக் 2.0 பெயர் பதிப்பு, 3டி லோகோ, புதிய வடிவ சீட் மற்றும் வீல் ரிம் டிசைன் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.
இதனால் பைக் முந்தைய மாடலை விட அதிக ஸ்டைலாக காட்சியளிக்கிறது.இந்த பைக் கிளாஸி பிளாக், கேண்டி சிவப்பு, மேட் சாம்பல், மேட் நீலம் மற்றும் மேட் பழுப்பு உள்ளிட்ட ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.
புதிய வசதிகள் என்ன?
இந்த புதிய மாடலில் டிஜிட்டல் மீட்டர் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் புளூடூத் இணைப்பு வசதியும் உள்ளது. இதன் மூலம் அழைப்புகள் மற்றும் தகவல் அறிவிப்புகளை பார்க்க முடியும். மேலும் யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்டும் கொடுக்கப்பட்டுள்ளது. மொபைல் போனை எளிதாக சார்ஜ் செய்ய இது உதவும்.
அதோடு இந்த வரிசையில் முதல் முறையாக ஹசார்ட் லைட் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. அவசர சூழ்நிலைகளில் இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இன்ஜின் மற்றும் மைலேஜ்
புதிய ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் 2.0 பைக், பெட்ரோல் சிக்கனத்திலும் செயல்திறனிலும் அசத்தலான மாற்றங்களைக் கண்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள 124.7cc இன்ஜின், சீரான பயணத்திற்குத் தேவையான பலத்தை வழங்குகிறது. குறிப்பாக, இந்த பைக்கின் மைலேஜ் முந்தைய மாடலை விட கணிசமாக உயர்ந்துள்ளது; முன்பு ஒரு லிட்டருக்கு 68 கி.மீ தந்து கொண்டிருந்த நிலையில், இப்போது புதிய எரிபொருள் செலுத்தும் தொழில்நுட்பத்தின் மூலம் 72 கி.மீ வரை மைலேஜ் தருகிறது.
மேலும், இதில் உள்ள 'i3S' வசதி, டிராஃபிக் சிக்னல்களில் பைக் நிற்கும் போது தானாகவே இன்ஜினை நிறுத்தி பெட்ரோலை சேமிக்கவும், கிளட்ச் பிடித்ததும் உடனடியாக மீண்டும் இன்ஜினை இயக்கவும் உதவுகிறது. ஒட்டுமொத்தத்தில், தினசரி பயணங்களுக்குப் பெட்ரோல் செலவைக் குறைக்கும் ஒரு சிக்கனமான மற்றும் வலிமையான தேர்வாக இந்தப் பைக் விளங்குகிறது.
ஹீரோ நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த பைக்கின் மொத்த பயன்பாட்டு செலவு மற்ற 125சிசி பைக்குகளை விட குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கான பெட்ரோல் செலவு சுமார் ரூ.87 ஆயிரம் மட்டுமே ஆகும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் மற்ற 125சிசி பைக்குகளில் அது ரூ.1 லட்சத்தை தாண்டும் என நிறுவனம் கூறியுள்ளது. சேவை செலவும் குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஆண்டுகள் அல்லது 70 ஆயிரம் கிலோமீட்டர் வரை உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.
விலை எவ்வளவு?
புதிய ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் 2.0 பைக் ரூ.86,500 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலை ஆகும். முன்பு வந்த டிஸ்க் பிரேக் மாடலின் விலையை விட குறைவான விலையில் இந்த புதிய மாடல் அறிமுகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
