சென்னை :ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது திருமணம் செய்து ஏமாற்றியதாகவும், கர்ப்பமாக்கி விட்டு சேர்ந்து வாழ மறுப்பதாகவும் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், மாதம்பட்டி ரங்கராஜுக்கு செப்டம்பர் 26ம் தேதி அன்று நேரில் ஆஜராகுமாறு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஜாய் கிரிசில்டா தனது புகாரில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை எம்.ஆர்.சி. நகர் கோவிலில் திருமணம் செய்து இரண்டு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்ததாகவும், ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக தன்னை விட்டு விலகி, தொடர்பை துண்டித்து, தன்னை தாக்கியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கும் அவர், தனது பிறக்காத குழந்தைக்கு நீதி கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினையும் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு பதிவுகள் செய்துள்ளார். மறுபுறம், மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டாவின் சமூக வலைதள பதிவுகள் தனது மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்திற்கு 12.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும், அவதூறு கருத்துகளுக்கு தடை விதிக்கவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜாய் கிரிசில்டாவின் சமூகவலைதள பதிவுகளால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக மாதம்பட்டி பகாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், நஷ்டதற்கு தான் பொறுப்பேற்க இயலாது என ஜாய் கிரிசில்டா கூறியதை தொடர்ந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
காவல்துறை விசாரணையில் ஜாய் கிரிசில்டாவிடம் ஆயிரம் விளக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மாதம்பட்டி ரங்கராஜிடமும் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி தொடர்பான விவாதங்களும் எழுந்துள்ளன.
