சரோஜா தேவி அம்மாவின் கண்கள் பொக்கிஷம்… நடிகர் விஷால் வேதனை!
சரோஜா தேவி கண்கள் யாருக்குப் போய் சேரப்போகுதுனு பார்க்க ரொம்ப ஆசையா இருக்கேன் என விஷால் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய சரஸ்வதி” என்று புகழப்பட்ட பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, 2025 ஜூலை 14 அன்று பெங்களூரில் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 87. பல கோடி ரசிகர்களின் இதயங்களை வென்ற இவரது மறைவு, திரையுலகத்தையும் பொதுமக்களையும் ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்று ரசிகர்கள் பிரார்த்திக்கின்றனர்.
இவருடைய மறைவுவுக்கு ரசிகர்கள் திரைபிரபலங்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், சரோஜா தேவி, தனது மறைவுக்கு பின் தனது கண்களை தானம் செய்தார். இவரது கண்கள் இரு குழந்தைகளுக்கு பொருத்தப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள சரோஜா தேவியின் இல்லத்தில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின், நடிகர் விஷால் பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசினார். “சரோஜா தேவி அம்மாவின் கண்கள் ஒரு பொக்கிஷம். அந்த கண்கள் யாருக்குப் போய் சேரப்போகுதுனு பார்க்க ரொம்ப ஆசையா இருக்கேன்,” என்று கண்ணீர் மல்க கூறினார். சரோஜா தேவியின் நடிப்பு மற்றும் அவரது எளிமையான பண்புகளை புகழ்ந்த விஷால், அவரது கண்கள் மூலம் இரு குழந்தைகளின் வாழ்க்கையில் ஒளி ஏற்படுவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
இன்னும் 2 மாசத்துல நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிச்சிட்டு அம்மாவ அங்க கூட்டிட்டு போயிட்டு காட்டலாம்னு இருந்தேன் அதுக்குள்ள இப்படி ஆகிவிட்டது. அவருடைய இறப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை மிகவும் வேதனையாக இருக்கிறது. அவருடைய இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் விஷால் பேசினார்.