ஓரணியில் இருந்தால் டெல்லி அணியின் திட்டம் பலிக்காது – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
சிதம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓரணியில் இருந்தால் டெல்லி அணியின் திட்டம் பலிக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15, 2025) கடலூர் மாவட்டத்தில் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்படி, சிதம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “தமிழ்நாடு ஓரணியில் இருக்கும்போது, எந்த டெல்லி அணியின் காவித்திட்டமும் இங்கு பலிக்காது” என உறுதியாகக் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின், ” குறிஞ்சிப்பாடி அருகே 150 ஏக்கரில் தோல் அல்லாத காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ‘தமிழ்நாடு வரலாற்றிலேயே, திராவிட மாடல் ஆட்சியில்தான் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு அதிகமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
இந்த சமூகநீதி பயணம் நீண்டது, அந்த பயணத்தை தடையின்றி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். சாதிய ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் ஒருநாள் மாறும். அதனை இந்த மு.க.ஸ்டாலின் மாற்றுவேன். பெரியாரிய வழி வந்த திராவிட இயக்க தலைவர்கள், மார்க்ஸிய சிந்தனை கொண்ட பொதுவுடைமை தலைவர்கள், காந்திய வழி வந்த தேசிய இயக்க தலைவர்கள், அம்பேத்கரிய இயக்க தலைவர்கள் என அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.
இதுதான் ஓரணியில் தமிழ்நாடு. அனைவரும் ஓரணியில் இருந்தால் டெல்லி அணியின் காவித் திட்டம் என்றும் பலிக்காது. திமுக அரசுக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் துணையாக உள்ளனர்” என்று கூறியிருக்கிறார்.