‘குறிஞ்சிப்பாடியில் காலணி தொழில் பூங்கா’ – முதல்வர் அறிவிப்பு!
கடலூர் குறிஞ்சிப்பாடி அருகே 150 ஏக்கரில் தோல் அல்லாத காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15, 2025) கடலூர் மாவட்டத்தில் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்படி, இன்று காலை சிதம்பரம் நகராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டத்தின் முதல் முகாமை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டம், அரசு சேவைகள் மற்றும் திட்டங்களை மக்களின் இல்லங்களுக்கு நேரடியாக கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டது. பின்னர், வேளாண்மை, மருத்துவம், மக்கள் நல்வாழ்வு, சமூக நலன், மற்றும் மகளிர் உரிமைத் துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதை தொடர்ந்து, சிதம்பரம் லால்புரத்தில் ஐயா எல். இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டைப் போற்றும் வகையில், ரூ.5.70 கோடி செலவில் கட்டப்பட்ட அவரது திருவுருவச் சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின், ”சுற்றுச்சூழலுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில் ரூ.75 கோடி மதிப்பீட்டில் 150 ஏக்கர் பரப்பளவில் தோல் அல்லாத காலணி மற்றும் காலணிகளுக்கான உதிரி பாகங்கள் உற்பத்திக்கான தொழில் பூங்கா குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கொடுக்கன்பாளையத்தில் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதனால் கடலூர், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 12 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.