சென்னை :தவெக தலைவர் விஜயின் இறுதித் திரைப்படமான ‘ஜனநாயகன்’க்கு தணிக்கைச் சான்றிதழ் தாமதம் காரணமாக வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், படக்குழுவுக்கு ஆதரவு குரல்கள் வலுத்து வருகின்றன. அரசியல் தரப்பில் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வரும் வேளையில், திரைத்துறை பிரபலங்களும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ரத்னகுமார் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது நடிகர் சிலம்பரசன் (சிம்பு) விஜய்க்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.சிலம்பரசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “பின்னடைவுகள் நடிகர் விஜயை ஒருபோதும் தடுக்கவில்லை. இதைவிட பெரிய புயல்களையும் விஜய் துணிச்சலுடன் கடந்து வந்தவர். ஜனநாயகன் வெளியாகும் நாள்தான் உண்மையான திருவிழா” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜயின் திரைப்பயணத்தின் முத்தாய்ப்பான இப்படத்திற்கு ஏற்பட்ட தடைகளை சிம்பு தைரியமாக சுட்டிக்காட்டியுள்ளார்.ஒரு பக்கம் அரசியல் தரப்பில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் தணிக்கை வாரியத்தை விமர்சித்து வரும் நிலையில், திரைத்துறையில் இருந்து ஆதரவு குரல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தணிக்கைச் சான்றிதழ் பிரச்னை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், சினிமா பிரபலங்களின் ஆதரவு விஜய்க்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.’ஜனநாயகன்’ படக்குழு விரைவில் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு சான்றிதழ் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. சிம்பு உள்ளிட்ட பிரபலங்களின் ஆதரவு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
