சென்னை :நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த அவருடைய 173-வது திரைப்படத்தினை இயக்குநர் சுந்தர் சி இயக்கவிருந்தார். அந்த படத்தினை கமல்ஹாசன் தயாரிக்கவிருந்ததாகவும், அதில் கமல்ஹாசனும் நடிக்கவிருந்ததாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, இந்தப்படத்தின் மீது எதிர்பார்ப்பு என்பது அதிகமாக இருந்தது. இயக்குனர் அறிவிப்பதற்கு முன்பே படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவியது என்று சொல்லலாம். பிறகு இயக்குநர் சுந்தர் சி என்று அறிவிக்கப்பட்ட பிறகு படம் கண்டிப்பாக ஜாலியான படமாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.
ஆனால், திடீரென அதிர்ச்சி தரும் விதமாக படத்தில் இருந்து இயக்குநர் சுந்தர் சி விலகியதாக அறிவிப்பு வெளியானது. ஏனென்றால், சுந்தர் சி கூறிய கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை எனவும், ரஜினி மாஸ் காட்சிகளை எதிர்பார்த்ததாகவும் சுந்தர் சி கூறிய கதை காமெடியாக இருந்த காரணத்தாலும் படத்தில் இருந்து சுந்தர் சி விலகியதாகவும் சினிமா வட்டாரத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது.
இப்படியான சூழலில், இதனை உறுதிப்படுத்தும் வகையில், கமல்ஹாசன் ரஜினிக்கு கதை பிடிக்கும் வரை கதை கேட்போம் என மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார். இது குறித்து அவர் பேசியதாவது,” நான் தயாரிப்பாளர். எனவே, என்னுடைய நட்சத்திரத்திற்கு (ரஜினிகாந்த்) பிடித்த கதையை எடுப்பதுதான் எனக்கு ஆரோக்கியமானது. ரஜினிகாந்த்துக்கு பிடிக்கும் வரை கதை கேட்டுக் கொண்டே இருப்போம்.
ரஜினி படத்தை இயக்க புதியவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது, கதை நன்றாக இருக்க வேண்டும் அவ்வளவுதான். கதை நன்றாக இருந்தது என்றால் படத்தை உடனடியாக தொடங்குவோம்” எனவும் தெரிவித்தார். மேலும் பீகார் தேர்தலில் வந்த முடிவுகள் குறித்து அவர் பேசுகையில் ” வெற்றியை பார்க்க வேண்டியவர்கள் வெற்றி பெற்றவர்கள்; நாம் அது நேர்மையாக வந்ததாக என்று தான் பார்க்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.
