நடிகர் அஜித்தின் 33 ஆண்டுகள் வெற்றிகரமான திரைப்பயணம்.., மனைவி ஷாலினி பெருமிதம்.!

நடிகர் அஜித்குமாரின் 33 ஆண்டுகள் வெற்றிகரமான திரைப்பயணம் தொடர்பாக ஷாலினி அஜித் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Ajithkumar - Shalini

சென்னை :நடிகர் அஜித்குமார் தனது 33 ஆண்டு திரைப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பது குறித்து அவரது மனைவி ஷாலினி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஷாலினி உணர்ச்சிபூர்வமாக தனது வாழ்த்தைப் பதிவில் ”2022 நீங்கள் ஒரு தொழிலை மட்டும் உருவாக்கவில்லை.. மக்களை சுமந்து சென்றிருக்கிறீர்கள், வாழ்க்கையை மாற்றியுள்ளீர்கள், எல்லாவற்றையும் கருணையுடன் செய்துள்ளீர்கள். உங்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அஜித்குமார், 1992 ஆம் ஆண்டு ‘பிரேம புஸ்தகம்’ படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். ‘அமராவதி’ படம் அவரது முதல் தமிழ்ப் படமாக அமைந்தது. 33 ஆண்டுகளில் வெற்றி, தோல்வி, சவால்கள் என பலவற்றை எதிர்கொண்டு, தனது நடிப்பு மற்றும் மோட்டார் ரேஸிங் ஆர்வத்தால் ரசிகர்களின் அன்பைப் பெற்றுள்ளார். முன்னதாக அவர் தனது அறிக்கையில், “ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்” என்று குறிப்பிட்டு, தனது ஒழுக்கம் மற்றும் உறுதியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஷாலினியும் அஜித்தின் பயணத்தில் முக்கிய பங்கு வகித்தவர். ‘அமர்க்களம்’ படத்தில் இணைந்து நடித்தபோது தொடங்கிய அவர்களது காதல், 2000 ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. திருமணத்துக்குப் பின் ஷாலினி நடிப்பிலிருந்து விலகி, குடும்பத்திற்காக தன்னை அர்ப்பணித்தார், மேலும் அஜித்தின் கடினமான காலங்களில் உறுதுணையாக இருந்தார். அவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

அஜித்தின் சினிமா மற்றும் மோட்டார் ரேஸிங் பயணத்தை ரசிகர்கள் கொண்டாட, ஷாலினியின் இந்த வாழ்த்து அவர்களது காதல் மற்றும் பரஸ்பர மரியாதையை மேலும் வெளிப்படுத்துகிறது.  சமீபத்தில் நடிகர் அஜித் குமார், ”என் வாழ்வின் பலம் மனைவி ஷாலினிதான். எல்லா தருணங்களிலும் அவர் என்னுடன் நின்றிருக்கிறார். என் குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக் இருவரும் என் வாழ்விற்கு அர்த்தம் கொடுத்தவர்கள்” என்றார்.