சென்னை :சமீபத்தில் வெளியான பராசக்தி திரைப்படத்தின் ட்ரெய்லர், வெளியான 24 மணி நேரத்திலேயே 4 கோடி பார்வைகளைத் தாண்டி சமூக வலைதளங்களில் பெரும் சாதனையைப் படைத்துள்ளது. அரசியல் பின்னணியும் தீவிரமான வசனங்களும் கொண்ட இந்த ட்ரெய்லர், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதனால், வெளியான குறுகிய நேரத்திலேயே ‘பராசக்தி’ ட்ரெய்லர் டிரெண்டிங்கில் முன்னிலை வகித்து வருகிறது.
இதற்கு மாறாக, பகவந்த் கேசரி திரைப்படத்தின் ரீமேக் ஆக உருவாகியுள்ள ஜனநாயகன் ட்ரெய்லர், 2 நாட்களில் 3.8 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இந்த ட்ரெய்லருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், பார்வை எண்ணிக்கையில் ‘பராசக்தி’ சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இரு ட்ரெய்லர்களையும் ஒப்பிட்டு விவாதித்து வருகின்றனர்.
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் 9ம் தேதி வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரை படத்திற்கு தணிக்கை குழு (CBFC) சான்றிதழ் வழங்கப்படாததால், வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அறிவிக்கப்பட்ட தேதியில் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னையில் முதல்நாள் காட்சிக்கான முன்பதிவு இன்னும் தொடங்காத நிலையில், சில பிற மாவட்டங்களில் மட்டும் முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும் தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலை காரணமாக ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். விரைவில் சான்றிதழ் கிடைத்து, படம் திட்டமிட்டபடி வெளியாக வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
