டெல்லி :இன்று மதியம் 12 மணிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ‘THE H FILES’ என்ற தலைப்பில் செய்தியாளர்களைச் சந்தித்து, ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் நடந்த வாக்கு மோசடி குறித்து ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார். ஹரியானாவில் மொத்தம் இரண்டு கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், அதில் 25 லட்சம் வாக்குகள் போலியானவை என்றும், அதாவது எட்டில் ஒரு வாக்கு திருடப்பட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதற்கு ஆதாரமாக, ஒரே பிரேசில் மாடலின் புகைப்படத்தைப் பயன்படுத்தி வெவ்வேறு பெயர்களில் 22 வாக்குகள் பதிவு செய்யப்பட்டதையும், ஒரு தொகுதியில் அதே படத்துடன் 100 வாக்குகள் சேர்க்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஒரு பெண்ணின் புகைப்படம் இரு வாக்குச்சாவடிகளில் 223 முறை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகவும், அவர் விரும்பினால் எத்தனை முறை வேண்டுமானாலும் வாக்களிக்க முடியும் என்றும் ராகுல் காந்தி கூறினார். இதுபோன்ற மோசடிகளை மறைப்பதற்காகவே தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பதாக அவர் குற்றம்சாட்டினார். ஹரியானாவில் 1.24 லட்சம் வாக்காளர்களுக்கு போலி புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், இது மையப்படுத்தப்பட்ட திட்டமிட்ட செயல் என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன்பு 3.5 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், குறிப்பாக முந்தைய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தவர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும் ராகுல் காந்தி சாடினார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் மட்டும் 180-க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதை நேரில் அழைத்து வந்து அவர் விளக்கினார். இது பாஜகவின் ஆட்சியைத் தக்கவைக்க செய்யப்பட்ட திட்டமிட்ட மோசடி என்று அவர் குறிப்பிட்டார்.
ஒரே வீட்டில் நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் என்ற பெயரில் மோசடி நடந்ததையும் ராகுல் அம்பலப்படுத்தினார். ஹோடல் தொகுதியில் ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள், ராய் தொகுதியில் 108 பேர், பாஜக நிர்வாகி வீட்டில் 66 வாக்காளர்கள் என பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஆதாரங்களுடன் காட்டினார். இதுபோன்ற ஆயிரக்கணக்கான சாவடிகளில் இலட்சக்கணக்கான போலி வாக்குகள் பதிவாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த மோசடி ஹரியானாவோடு நிற்கப்போவதில்லை என்று எச்சரித்த ராகுல் காந்தி, பீகாரிலும் அதே மாடல் பயன்படுத்தப்பட்டு ஆட்சி திருடப்படுவதாகக் கூறினார்.
தேர்தல் ஆணையம் உடனடியாக முழு வாக்காளர் பட்டியல், சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். இல்லையெனில் மேலும் ஆதாரங்களை வெளியிடுவேன் என்று அறிவித்தார். இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று கூறி, இளைஞர்களின் எதிர்காலத்தைப் பறிக்கும் சதி என்று அவர் எச்சரித்தார்.இந்த வெளியீடு ஹரியானா, பீகார், மகாராஷ்டிரா தேர்தல்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் இதுவரை முறையான பதிலளிக்கவில்லை. ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், இது இந்திய ஜனநாயகத்தின் நம்பகத்தன்மைக்கு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
