டெல்லி :மத்திய அரசு, பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளை (ரியல்-மணி கேமிங்) தடை செய்வதற்காக மக்களவையில் ‘ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு மசோதா, 2025’ (Promotion & Regulation of Online Gaming Bill, 2025) தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, ஆன்லைன் சூதாட்டம், அடிமையாதல் மற்றும் மாநிலங்களுக்கு இடையே ஒரே மாதிரியான ஒழுங்குமுறை இல்லாததால் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவின்படி, பணம் வைத்து விளையாடப்படும் ஆன்லைன் விளையாட்டுகளை இயக்குவது அல்லது ஊக்குவிப்பது தொடர்பான கடுமையான தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தடையை மீறி ஆன்லைன் பண விளையாட்டுகளை இயக்கும் நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக விளம்பரங்கள் அல்லது பிரச்சாரங்கள் செய்பவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
மேலும், ஆன்லைன் பந்தயம் தொடர்பான நிதி பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் நிதி பரிமாற்றம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் மீறுவோருக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் உயர்ந்த அபராதம் விதிக்கப்படும் என மசோதா கூறுகிறது.
இந்த மசோதா, இ-ஸ்போர்ட்ஸ் மற்றும் பணமில்லாத திறன் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் அதே வேளையில், சூதாட்டமாகக் கருதப்படும் ஆன்லைன் பண விளையாட்டுகளை தடை செய்யும் நோக்கம் கொண்டது. மேலும், இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டால், இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுத் துறையில் முதல் விரிவான தேசிய சட்டமாக அமையும். இது ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் மனநலப் பிரச்சினைகள், மோசடி, பணமோசடி மற்றும் இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.
