டெல்லி : நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் (NEET), சிபிஎஸ்இ (CBSE) உள்ளிட்ட தேர்வுத் தாள் கசிவு (Paper Leak) விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகளும் மாணவர்களும் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஜூன் 6 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் பிரம்மாண்ட போராட்டத்தை நடத்திய 'காக்ரோச் ஜனதா கட்சி' (Cockroach Janata Party - CJP) நிறுவனரான அபிஜித் திப்கே, மத்திய அரசுக்கு மிகக் கடுமையான இறுதி எச்சரிக்கை (Ultimatum) ஒன்றை விடுத்துள்ளார்.
அபிஜித் திப்கே வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் அவர் கூறியதாவது " மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வரும் சனிக்கிழமைக்குள் (ஜூன் 13, 2026) தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தவறினால், இந்தப் போராட்டம் அடுத்த கட்டத்திற்குப் பாயும்" என தெரிவித்துள்ளார்.
அது மட்டுமன்றி, அமைச்சர் பதவி விலகாத பட்சத்தில், நான் தனிப்பட்ட முறையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும், முக்கிய நகரங்களுக்கும் நேரடியாகச் சென்று போராட்டங்களை ஒருங்கிணைக்க உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை மாநில அளவிலான போராட்டங்களுக்குப் பிறகும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தங்களிடம் 'பிளான்-பி' தயாராக இருப்பதாக CJP அறிவித்துள்ளது.
இது குறித்து அவர் கூறியிருப்பது "மாநிலப் போராட்டங்களுக்குப் பிறகும் அமைச்சர் பதவி விலகவில்லை என்றால், எங்களுக்கு வேறு வழியில்லை. இந்தியாவின் மூலை முடுக்கில் இருக்கும் 1 கோடிக்கும் அதிகமான பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, மீண்டும் நாட்டின் தலைநகரான புது டெல்லியில் களம் காண்போம். அந்தப் போராட்டம் முற்றிலும் அமைதியான முறையில், ஆனால் மிக பிரம்மாண்டமாக இருக்கும்." எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
நீட் தேர்வு எழுதிய 22 லட்சம் மாணவர்கள், சிபிஎஸ்இ (CBSE), கியூட் (CUET) மற்றும் எஸ்எஸ்சி (SSC) தேர்வுகள் என ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டுகிறது. இதற்கு கல்வி அமைச்சர் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்பதே இவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
கடந்த மே 16 அன்று வெறும் ஒரு 'இன்டர்நெட் மீம்' (Internet Meme) ஆகத் தொடங்கப்பட்ட இந்த 'காக்ரோச் ஜனதா கட்சி', இன்று சோனாம் வாங்சுக், மஹுவா மொய்த்ரா போன்ற முக்கிய ஆளுமைகளின் கவனத்தை ஈர்த்து, டெல்லியில் இருந்து மாநிலங்கள் வரை பரவும் ஒரு நிஜமான மாணவர் இயக்கமாக மாறியிருப்பதுதான் தற்போதைய இந்திய அரசியலின் ஹாட் டாபிக் என்பதும் குறிப்பிடத்தக்கது.
