டெல்லி:தலைநகர் டெல்லிமற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான NCR-இல் ஆகஸ்ட் 9, 2025 அன்று காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, பயணங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) டெல்லிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது, மேலும் மழை மற்றும் இடியுடன் கூடிய புயல் மாலை வரை தொடரும் என்று கணித்துள்ளது.
இந்த மழையால் விமான போக்குவரத்து மற்றும் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இந்த மழையின் தாக்கத்தால், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (IGI) 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, மேலும் 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. FlightRadar24 தரவுகளின்படி, காலை 9:15 மணி நிலவரப்படி, 141 புறப்படும் விமானங்களும், 24 வரும் விமானங்களும் தாமதமாகின. இந்தி கோ, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட விமான நிறுவனங்கள், பயணிகளுக்கு முன்கூட்டியே விமான நிலையத்திற்கு வரவும், விமான நிலையப் பயணத்திற்கு கூடுதல் நேரம் ஒதுக்கவும் அறிவுறுத்தியுள்ளன.
சாலைகளில் நீர் தேங்கியதால், மத்தூரா சாலை, பஞ்ச்குயான் மார்க், கன்னாட் பிளேஸ், மோதி பாக், ஆர்.கே. புரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாரத் மண்டபத்தின் 7-வது நுழைவு வாயிலிலும் நீர் தேங்கியது. பயணிகள் மற்றும் அலுவலகம் செல்பவர்கள் மழைநீரில் சிக்கி தவித்தனர், மேலும் சாலைகளில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்தன.
வானிலை ஆய்வு மையம், டில்லியில் 33 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலையும், 25 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலையும் இருக்கும் என்று கணித்துள்ளது. காசியாபாத், நொய்டா, கிழக்கு டில்லி ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், இமாச்சல பிரதேசத்தின் மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. விமான நிலைய அதிகாரிகள், பயணிகளின் பயணத்தை பாதிப்பில்லாமல் நிர்வகிக்க, தரைப் பணியாளர்கள் மற்றும் முகமைகளுடன் இணைந்து பணியாற்றுவதாக தெரிவித்துள்ளனர். இந்த கனமழை, டில்லி மக்களுக்கு வெப்பத்திலிருந்து நிவாரணம் அளித்தாலும், நகரின் போக்குவரத்து மற்றும் அன்றாட நடவடிக்கைகளை கடுமையாக பாதித்துள்ளது.
