பெங்களூர் : காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக பார்த்த பிறகே அதுகுறித்து விரிவாக கருத்து தெரிவிப்பேன். உங்கள் கேள்வியின் அடிப்படையில் மட்டும் பதில் சொல்ல முடியாது. அந்த தீர்மானத்தின் முழு விவரத்தையும் ஆய்வு செய்து பிறகு என்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்கிறேன்" என்று கூறினார்.
முன்னதாக, காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த இந்த தீர்மானத்திற்கு பேரவையில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததால் அது ஒருமனதாக நிறைவேறியது.
தீர்மானத்தில், காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் 2007ஆம் ஆண்டு வழங்கிய இறுதி தீர்ப்பையும், உச்சநீதிமன்றம் 2018ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட நதி படுகை மாநிலங்களின் ஒப்புதல் மற்றும் ஒன்றிய அரசின் அனுமதி இல்லாமல் எந்த புதிய அணைத் திட்டத்தையும் முன்னெடுக்கக் கூடாது என்றும், மேகதாது அணை திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட எந்தவித அனுமதியையும் வழங்கக்கூடாது என ஒன்றிய அரசை தமிழக சட்டப்பேரவை வலியுறுத்தியுள்ளது.
காவிரிப் படுகை ஏற்கனவே நீர்ப்பற்றாக்குறை கொண்ட பகுதியாக காவிரி நடுவர் மன்றமும் உச்சநீதிமன்றமும் குறிப்பிட்டுள்ள நிலையில், புதிய அணைகள் அல்லது கூடுதல் நீர் பயன்பாட்டு திட்டங்கள் கீழ்ப்படுகை மாநிலங்களின் உரிமையை பாதிக்கும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் ஒருமனதாக எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் அதனை ஆய்வு செய்து பின்னர் பதிலளிப்பேன் என தெரிவித்திருப்பது, மேகதாது விவகாரத்தில் அடுத்த கட்ட அரசியல் மற்றும் சட்டப்போராட்டம் தொடரும் என்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
