திருவள்ளூர் :காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில், சமக்ர சிக்க்ஷா அபியான் (SSA) திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.2,152 கோடி கல்வி நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசைக் கண்டித்து, ஆகஸ்ட் 29, 2025 முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். உயர் இரத்த அழுத்தம் காரணமாக ஆகஸ்ட் 30 அன்று திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தற்போது மருத்துவமனையில் இருந்தபடியே நான்காவது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்கிறார்.இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, ஆகஸ்ட் 30, 2025 அன்று தொலைபேசி மூலம் சசிகாந்த் செந்திலை தொடர்புகொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
அவரது போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்த ராகுல் காந்தி, இந்த நிதி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை வலியுறுத்தியதற்காக அவரைப் பாராட்டினார்.சசிகாந்த் செந்தில், “இந்தப் போராட்டம் தனிப்பட்டது அல்ல, தமிழ்நாட்டின் 43 லட்சம் மாணவர்கள் மற்றும் 2.2 லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலத்திற்காகவே இது நடத்தப்படுகிறது,” என்று கூறியுள்ளார். மேலும், ஒன்றிய அரசு இந்த நிதியை விடுவிக்கும் வரை தனது உண்ணாவிரதத்தை தொடர்வேன் என உறுதியாக தெரிவித்தார். இந்தப் போராட்டம் தமிழ்நாட்டில் கல்வி உரிமைகளுக்காகவும், ஒன்றிய-மாநில உறவுகளில் கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாப்பதற்காகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த விவகாரம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம். நாசர் மற்றும் மாநில மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு உறுப்பினர்கள், செந்திலை மருத்துவமனையில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் இந்த நிதி விவகாரத்தில் ஒன்றிய அரசை கண்டித்து, உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்
