கர்நாடகா :பாலியல் வழக்கில் சிக்கிய கர்நாடக முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், முன்னாள் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் குற்றவாளி என நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த வழக்கில், பிரஜ்வல் ரேவண்ணா தனது வீட்டில் பணிபுரிந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3,000-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
நேற்றைய தினம், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் பிரஜ்வலை குற்றவாளி என தீர்ப்பளித்தது. இன்று நீதிபதி சந்தோஷ் கஜானந்த் பட் ஆயுள் தண்டனையுடன் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில், 1632 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் 113 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். மேலும் வலுவான தடயவியல் ஆதாரங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் முக்கிய பங்காக சேர்க்கப்பட்டது. பிரஜ்வல் ரேவண்ணா, கடந்த ஆண்டு வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று, பின்னர் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இந்த தீர்ப்பு கர்நாடக அரசியல் களத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
