டெல்லி :காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பாஜக தலைமையிலான மத்திய அரசுமற்றும் இந்திய தேர்தல் ஆணையம் ஆகியவை அதானி மற்றும் அம்பானி போன்ற தொழிலதிபர்களுக்கு ஆதரவாக வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்து வாக்குகளை நீக்கியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
பீகாரில் வாக்காளர் உரிமை யாத்திரையை தொடங்கிய மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஏழைகளின் கைகளில் கடைசியாக இருக்கும் வாக்குரிமையையும் பறிக்க முயற்சி நடப்பதாக பேசினார். குறிப்பாக, பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், இது பாஜகவுக்கு சாதகமாகவும், அதானி மற்றும் அம்பானி போன்றவர்களுக்கு உதவும் வகையில் செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக, கர்நாடகாவின் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாகவும், ஒரே முகவரியில் 80 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் ராகுல் காந்தி ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பீகாரில் 124 வயது மின்டா தேவி என்ற பெயரில் முதல் முறை வாக்காளராக பதிவு செய்யப்பட்டது உள்ளிட்ட முறைகேடுகளை அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்றும், 7 நாட்களுக்குள் உறுதிமொழி பத்திரம் சமர்ப்பிக்காவிட்டால் அவை செல்லாதவையாக கருதப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், “பொய் குற்றச்சாட்டுகளால் தேர்தல் ஆணையத்தை அச்சுறுத்த முடியாது” என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் தேர்தல் ஆணையத்திற்கு பேரணியாக சென்று மனு அளித்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவு தெரிவித்து, தேர்தல் ஆணையத்தை பாஜக தனது “மோசடி இயந்திரமாக” மாற்றியுள்ளதாக கூறியுள்ளார்.
