ஆதாரம் கேட்டால் ராகுல் காந்தி பின்வாங்குகிறார் – அனுராக் தாக்கூர் !

ராகுல் காலத்தில் ஆதாரம் கேட்டால் பின்வாங்குகிறார் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சொல்வது அவரது பழக்கமாகிவிட்டது என பாஜக எம்பி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

rahul gandhi anurag thakur

டெல்லி :மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, செப்டம்பர் 18, 2025 அன்று டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தேர்தல் முறைகேடு குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். “கர்நாடகாவின் ஆலண்ட் தொகுதியில் 6,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் நீக்கப்பட்டன. இது தேர்தல் ஆணையத்தின் (ECI) அறிவுறுத்தலுடன் நடந்தது. இது ஜனநாயகத்திற்கு எதிரான செயல்,” என்று அவர் கூறினார். மேலும், “எனது குற்றச்சாட்டுகளுக்கு முழு ஆதாரம் உள்ளது. இது இளைஞர்களுக்கு தேர்தல் முறைகேடுகளை வெளிப்படுத்தும் முதல் படியாகும். இனி வரவிருக்கும் ஆதாரங்கள் இன்னும் பெரிய வெளிப்பாடாக இருக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், “மகாதேவபுராவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்குகள் உள்ளன. இவை CCTV இல்லாத இடங்களில் நடந்தவை,” என்று கூறி, தேர்தல் ஆணையத்தை பாஜகவுடன் இணைந்து செயல்படுவதாக விமர்சித்தார். இந்தப் பேச்சு, 2025 பிஹார் தேர்தலுக்கு முன் தேர்தல் செயல்முறைகள் குறித்து கடும் விவாதத்தை தூண்டியது. தேர்தல் ஆணையம் (ECI), ராகுலின் குற்றச்சாட்டுகளை “தவறானவை மற்றும் ஆதாரமற்றவை” என்று மறுத்தது. “வாக்காளர் பட்டியலில் எந்த வாக்கையும் ஆன்லைனில் பொதுமக்கள் நீக்க முடியாது, இது கடுமையான மேற்பார்வையில் நடக்கும் செயல்முறை.

2023-ல் ஆலண்ட் தொகுதியில் வாக்காளர்களை நீக்க முயற்சிகள் தோல்வியடைந்தன, இதற்காக ECI ஒரு FIR பதிவு செய்து விசாரித்தது,” என்று ECI தெளிவுபடுத்தியது. மேலும், “ஆலண்ட் தொகுதியில் 2018-ல் பாஜகவின் சுபாத் குட்டேதர், 2023-ல் காங்கிரஸின் பி.ஆர். பாட்டீல் வெற்றி பெற்றனர். வாக்கு நீக்கம் தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை,” என்று ECI கூறியது.

இருப்பினும் ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் பேசவும் தொடங்கிவிட்டார்கள். அந்த வகையில், பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு கடும் பதிலடி கொடுத்தார். “ராகுல் காந்தி ஆதாரம் கேட்டால் பின்வாங்குகிறார். மக்களால் 90 தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட காங்கிரஸ், அவரது தலைமையில் விரக்தியில் உள்ளது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சொல்வது ராகுலின் பழக்கமாகிவிட்டது,” என்று அவர் கூறினார்.

மேலும், “ராகுலின் குற்றச்சாட்டுகள் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை குறைக்க முயல்கின்றன. ஆதாரம் இல்லாமல் பேசுவது அவரது வழக்கமான உத்தி,” என்று விமர்சித்தார். இந்தப் பேச்சு, 2025 தேர்தல்களுக்கு முன் தேர்தல் செயல்முறைகள் குறித்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.