வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!
நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நடைபெற வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் என்பது அதிகரித்துள்ளது. இரு நாட்டு படைகளும் தங்கள் படைகளை பலப்படுத்தும் நோக்கில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.
இப்படியான சூழலில் பொதுமக்களும் இந்த போர் சூழும் சூழலில் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் போர்க்கால ஒத்திகையை நாளை (மே 7) நடத்த வேண்டும் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, எதிரி நாட்டில் இருந்து வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டால் என்னென்ன முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், பாதுகாப்பான இடங்களுக்கு எவ்வாறு செல்ல வேண்டும், பதுங்கு குழிகளில் எவ்வாறு தற்காத்து கொள்ளவேண்டும், மின்சார துண்டிப்பில் எவ்வாறு செயல்பட வேண்டும் என பல்வேறு வகைகளில் நாளை போர்க்கால ஒத்திகைகள் நடைபெற உள்ளன .
குறிப்பாக வான்வெளி தாக்குதலில் பாதிப்பை எதிர்கொள்ளும் பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், லடாக், ஜம்மு காஷ்மீர் (பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள நாடுகள்) உள்ளிட்ட மாநிலங்களில் வான்வெளி தாக்குதல் எச்சரிக்கை ஒலியை ஒலிக்கவிட்டு சோதனை நடத்தப்படும்.
அதேபோல, மின்சாரம் தற்காலிகமாகஸ் சிறிது நேரம் துண்டிக்கப்பட்டு, இரவு நேரத்தில் எதிரி தாக்குதல்களை தவிர்க்கும் பயிற்சி நடத்தப்படும். அப்போது இன்வெட்டர், பேட்டரி மூலம் கூட மின்சாரம் பயன்படுத்தக் கூடாது. மேலும், கார், பைக் வாகனங்களில் கூட விளக்குள் எரிய கூடாது என கூறப்பட்டுள்ளது.
அதேபோல, தாக்குதல் நடைபெற்றால் மக்கள், போர் பதற்றம் அபாயமுள்ள பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் ஒத்திகையும் நாளை நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரி நாட்டு தாக்குதல்களின் போது பாதுகாப்பாக இருப்பது குறித்து விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு விதித்த போர்க்கால ஒத்திகை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.