சென்னை :மதுராந்தகத்தில் இன்று (ஜனவரி 22, 2026) நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக பேசினார். கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் பங்கேற்றனர்.பிரதமர் மோடி தனது உரையில், “தமிழகத்தில் திமுக ஆட்சி என்பது ஒரு குடும்பம் வாழ்வதற்காக எட்டு கோடி மக்களை சுரண்டும் ஆட்சி. இது நியாயமா? திமுக ஆட்சி தேவையா? திமுக தேவையா?” என்று கேள்வி எழுப்பினார்.
திமுகவை “CRIME, MAFIA, CORRUPTION” என்று விமர்சித்த அவர், “ஊழல் பணம் யாருடைய பாக்கெட்டுக்கு செல்கிறது என்பது சிறுவர்களுக்கு கூட தெரியும். திமுக அரசை தூக்கி எறிய தமிழ்நாட்டு மக்கள் முடிவு எடுத்துவிட்டார்கள்” என்று தெரிவித்தார்.தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை UPA ஆட்சியில் தடை செய்ததை நினைவுகூர்ந்த பிரதமர், “UPA அரசு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. ஆனால் NDA அரசுதான் சட்ட ரீதியாக தடையை நீக்கி தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை மீட்டுக் கொடுத்தது” என்று பெருமிதம் தெரிவித்தார்.
முருகனுக்கு தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சையையும் குறிப்பிட்டு, “தமிழ் கலாச்சாரத்தின் எதிரி திமுக” என்று குற்றஞ்சாட்டினார்.விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு ஆதரவு தருவதாகவும், மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு திட்டங்களை வழங்கியுள்ளதாகவும் பிரதமர் கூறினார். “தமிழகத்தில் மிகப்பெரிய பலமே விவசாயிகளும் மீனவர்களும் தான்.
அவர்களுக்கு ஆதரவு தருவதே எங்கள் நோக்கம்” என்று வலியுறுத்தினார்.தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க “இரட்டை இன்ஜின் ஆட்சி” தேவை என்று பிரதமர் மோடி தெரிவித்தார். “மத்திய அரசுடன் இணக்கமாக செல்லக்கூடிய அரசு தமிழகத்தில் தேவை. திமுக ஆட்சியில் தொழில் முதலீடுகள் குறைந்துள்ளன. NDA ஆட்சியில் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்லும்” என்று அவர் உறுதியளித்தார்.
இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய அனைத்து கருத்துகளும் திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தவை. “தமிழ்நாடு ஆட்சி மாற்றத்துக்கு ரெடி. திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து தமிழகம் விடுவிக்கப்படும்” என்று அவர் கூறியது கூட்டத்தில் ஆரவாரமான வரவேற்பைப் பெற்றது. இந்தக் கூட்டம் 2026 தேர்தலில் திமுகவுக்கு எதிரான பெரும் சவாலாக அமையும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
