சென்னை : நேற்று தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைவர் விஜய் இன்று தனது எக்ஸ் (X) வலைத்தளப் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.அந்தப் பதிவில் விஜய் கூறியிருப்பதாவது:“என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே, அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே, பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே என்று ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தி, கட்டுப்படுத்தி வைத்திருந்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.
அரசியலைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது. இது எப்போது தொடங்கியது என்பதை நடுநிலை மனம் கொண்டோர் அனைவரும் உணர்வர்.இதுவரை பெருமளவிலான வாக்குகள் வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்த நிலை மாறி, 2026 ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகியுள்ளது.85% வாக்குப்பதிவு என்பது இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று.
வாக்குச்சாவடிகள் எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம் போல, குடும்பம் குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்த காட்சி வியக்கத்தக்கதாக இருந்தது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெரும் செலவில் வந்து வாக்களித்த ஜனநாயகர்களுக்கு இரு கரம் கூப்பி வணக்கம்.தேர்தல் திருவிழா, ஜனநாயகத் திருவிழா என்று சொல்லப்படுவதன் உண்மையான அர்த்தம் நேற்றுதான் முழுமையாக உணரப்பட்டது.
ஆனால் இது ஒரு தொடக்கம் மட்டுமே.தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், தாத்தா, அப்பா, அண்ணன், தம்பிகள் உள்ளிட்ட என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக, நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸ்க்கு என் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும்.மேலும், நான் நன்றி செலுத்த வேண்டியது நம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும், அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும்தான். ‘இவர்களுக்கு என்ன அரசியல் தெரியும்?’ என்று ஏளனம் பேசியவர்களுக்கு செயல் மூலம் பதிலடி கொடுத்த தோழர்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும்.கழகத் தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் என் நன்றி.
நம்பிக்கையோடு இருப்போம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.”இந்தப் பதிவின் மூலம் விஜய், 85% வாக்குப்பதிவை தமிழகத் தேர்தல் வரலாற்றில் ஒரு முக்கிய சாதனையாகப் பாராட்டியதோடு, வாக்களித்த மக்கள், கழகத் தொண்டர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
