அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது! தமிழகத்துக்கு கனமழை அலர்ட்!

இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

rain news tn

சென்னை :தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று (நவம்பர் 22) ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், மேலும் 48 மணி நேரத்தில் தீவிரக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் (Deep Depression) வலுப்பெற வாய்ப்புள்ளது.

தற்போதைய பாதைப்படி, இந்த அமைப்பு அந்தமான்-நிகோபார் தீவுகளை நெருங்கி, பின்னர் வடக்கு-வடமேற்கு திசையில் தமிழகம்-ஆந்திரா கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடும். அடுத்த 4-5 நாட்களில் இது புயலாக (Cyclonic Storm) வலுப்பெற வாய்ப்பு உள்ளதால், வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இதன் காரணமாக இன்று 22-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

23-11-2025: தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

24-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.