கீழடியின் தொன்மையை ஏற்க ஏன் தயக்கம்? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை : தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி கிராமத்தில், 2014-15 முதல் மத்திய தொல்லியல் துறையின் கீழ் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த அகழாய்வுகள், வைகை நதிக்கரையில் அமைந்த கீழடி ஒரு தொன்மையான நகர்ப்புற நாகரிகமாக இருந்ததை உறுதிப்படுத்தின. இந்த ஆய்வுகளை இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனமும் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையும் மேற்கொண்டன.
2023 ஜனவரியில், அமர்நாத் ராமகிருஷ்ணன் 982 பக்க ஆய்வறிக்கையை மத்திய தொல்லியல் துறைக்கு சமர்ப்பித்தார், ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை. மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அறிக்கையை வெளியிடாமல், “திருத்தம் தேவை” எனக் கூறி, அறிக்கையை மாற்றி சமர்ப்பிக்குமாறு அமர்நாத் ராமகிருஷ்ணனிடம் கோரியது.
ஆனால், அறிக்கை சரியாக உள்ளதாகவும் மாற்றம் தேவையில்லை என்றும் அவர் பதிலளித்தார். சமீபத்தில் சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கீழடி ஆய்வுகளுக்கு மேலும் அறிவியல்பூர்வ முடிவுகள் தேவைப்படுவதாகவும், அதன் பின்னரே அறிக்கை அங்கீகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதனையடுத்து, வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது என அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்து பேசியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” முதலில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள். அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசியாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள். இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கிறது.
5350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட்பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? தமிழர்களை எப்போதும் இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தாலா?
மறந்து விடாதீர்கள். வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது. அவை மக்களுக்கானவை. மக்களிடமே சென்று சேரும்! பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன?” எனவும் காட்டத்துடன் பதிவிட்டுள்ளார்.
முதலில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள். அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசியாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள். இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு… https://t.co/qImdPGjyMx
— Thangam Thenarasu (@TThenarasu) June 10, 2025