அதிகாலையில் பயங்கரம்., அதிமுக கிளைச் செயலாளர் வெட்டிப் படுகொலை.! 

சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடி கிராமத்தில் அப்பகுதி அதிமுக கிளைச் செயலாளர் கணேசன் என்பவர் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

ADMK Person murder in Sivagangai

சிவகங்கை :இன்று அதிகாலை சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடி பகுதியில் அப்பகுதி அதிமுக கிளை செயலாளர் கணேசன் என்பவரை ஒரு மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளது. இதுகுறித்து திருப்பாசேத்தி பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டாகுடியை சேர்ந்த கணேசன் (வயது 70)அப்பகுதியில் ரியல் எஸ்டேட் பணியை செய்தும், அப்பகுதியில் மளிகை கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். மேலும், அதிமுக கட்சியில் கிளை செயலாளராகவும் கணேசன் இருந்து வருகிறார். ரியல் எஸ்டேட் தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இப்படியான சூழலில் தான், இன்று அதிகாலை வழக்கம் போல கணேசன் தனது கடையை திறக்க வருகையில், இக்கொலை சம்பவத்தை ஓர் மர்ம கும்பல் அரங்கேற்றியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே கணேசன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.  கொலைச் சம்பவம் தொடர்பாக திருப்பாசேத்தி பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நேர்ந்த இடத்தில் தடயங்களை சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதே போல சிவகங்கை மாவட்டத்தில் தீபாவளியன்று மணி என்பவர் கொலை செய்யப்பட்டார். அடுத்தும் சிவகங்கை மாவட்டத்தில் 63 வயது லட்சுமி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். தீபாவளியை அடுத்து இம்மாவட்டத்தில் நடைபெற்ற 3வது கொலை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.