5 மற்றும் 8ஆம் வகுப்பில் ஃபெயில்! சிபிஎஸ்இ முடிவுக்கு அன்பில் மகேஷ் கடும் கண்டனம்!
சிபிஎஸ்இ பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்பில் மாணவர்களை ஃபெயில் செய்யும் நடைமுறை கல்வி இடைநிற்றலை அதிகரிக்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களும் கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறை செயல்பாட்டில் உள்ளது. இதனால் மாணவர்களின் பள்ளி கல்வி இடைநிற்றல் வெகுமளவு குறைந்துள்ளது என தமிழக அரசு சார்பில் கூறப்படுகிறது.
ஆனால், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் பள்ளிகளில் இந்த முறை நடைமுறையில் இல்லை. குறிப்பாக சிபிஎஸ்இ பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் தோல்வி பெற்றால் அவர்கள் மீண்டும் அதே வகுப்பு படிக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் பள்ளி கல்வியில் மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் நாம் செயல்பட்டு வருகிறோம். ஆனால், சிபிஎஸ்இ பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்பில் தேர்வில் தோல்வியுற்றால் ஃபெயில் செய்யும் நடவடிக்கையானது அங்கு பயிலும் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களுக்கு மனஅழுத்தத்தை தான் தரும். 5வது படிக்கும் பிள்ளை ஃபெயில் செய்யபட்டால் அவர்களுக்கு மாணவர்களின் பெற்றோர் எந்த மாதிரியான அறிவுரை கூறுவார்கள்?
அடுத்து 8ஆம் வகுப்பு பயிலும் பிள்ளைகளுக்கும் இதே நிலை தான். அதனால் தான் நாம் இப்பொது 8ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் என போட்டு அதற்கப்புறம் 9வது வகுப்பில் பொதுத்தேர்வுக்கு தயார் படுத்தினால் தான், அவர்கள் மேற்படிப்பிற்குள் வருவார்கள். இல்லையென்றால் தோல்விபெறும் மாணவர்கள் கல்வி பயில தொடர மாட்டார்கள். இதனை கருத்தில் கொண்டு தான் நாங்கள் தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து கொண்டு வருகிறோம்.
தற்போது அவர்கள் (மத்திய அரசு) சிபிஎஸ்இ மூலம் தங்கள் வேலையை ஆரம்பித்துவிட்டார்கள். 5வது படிக்கும் பிள்ளைக்கு ஃபெயில் என்றால் என்ன என்பதே தெரியாது. தேசிய கல்வி கொள்கையினால் சிபிஎஸ்இ பயிலும் உங்கள் பிள்ளையின் கல்வி எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. அதனை பெற்றோர்கள் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும். கேள்வி எழுப்பினால் தான் தமிழக அரசுக்கு அது வலுசேர்க்கும் விதமாக இருக்கும். ஒரு கட்சிக்காகவோ அல்லது ஒரு இயக்கத்திற்காவோ நான் இதனை கேட்கவில்லை. கல்விக்காக கேட்கிறோம்.
1.29 கோடி மாணவர்கள் பயின்று வருகிறார்கள். சிபிஎஸ்இ பள்ளிகளில் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது தெரிந்ததும் இன்று காலையில் முதலமைச்சர் செல்போனில் பதட்டத்துடன் அழைத்து பேசினார். சிபிஎஸ்இ பயிலும் உங்கள் பிள்ளை 5ஆம் வகுப்பில் தோல்வி பெற்றால் நாங்கள் ஃபெயில் செய்து விடுவோம் என பள்ளி நிர்வாகம் கையெழுத்து வாங்கினால் அதனை எதிர்த்து கேளுங்கள். இதனை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என நம் முதல்மைச்சர் கூறியதன் பெயரில் தான் இன்று செய்தியாளர்களை சந்தித்து இந்த செய்தியை கூறுகிறேன் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார் .