சென்னை :தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இருந்து விலகிய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனின் விலகல் முடிவு வருத்தமளிப்பதாகவும், பாஜக தலைவர்கள் அவர்களை மீண்டும் கூட்டணிக்கு அழைத்து வர முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
NDA கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ், டிடிவி தினகரன் அடுத்தடுத்து அறிவித்தது, டெல்லி தலைமையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், டிடிவி தினகரனுடன் போனில் பேசியதாக அண்ணாமலை கூறியுள்ளார். ஓபிஎஸ், டிடிவி இருவரும் பெருந்தன்மைமிக்க அரசியல்வாதிகள் என்பதால், அவர்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், விஜய்க்கு மாஸ் இருக்கிறது, எனவே அவர் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அண்ணாமலை கூறியுள்ளார். அதேநேரம், தாக்கம் என்பது வேறு, ஆட்சி அமைப்பது வேறு என்றும், அதிமுக பாஜக கூட்டணியே தேர்தலில் வெற்றி பெறும் எனவும் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன், பிரேமலதா உள்ளிட்டோர், வரவிருக்கும் 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறியிருந்தனர்.
