கருப்பு மசோதா, கருப்பு தினம்..முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

மக்களவையில் அமித்ஷா தாக்கல் செய்த 130வது அரசமைப்புத் திருத்த மசோதா சீர்திருத்தம் அல்ல, ஒரு கருப்பு மசோதா என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Featured image

சென்னை :மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆகஸ்ட் 20, 2025 அன்று மக்களவையில் 130வது அரசமைப்புத் திருத்த மசோதா, 2025, மற்றும் மத்திய அரசு பிரதேசங்கள் (திருத்த) மசோதா, 2025, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா, 2025 ஆகியவற்றை தாக்கல் செய்தார். இந்த மசோதாக்கள், ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் 30 நாட்கள் தொடர்ச்சியாக தடுப்பு காவலில் வைக்கப்பட்ட பிரதமர், முதலமைச்சர் அல்லது அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்குவதற்கு சட்டரீதியான கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த 130வது அரசமைப்புத் திருத்த மசோதாவை “கருப்பு மசோதா” என்று விமர்சித்து, இது இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றி, அரசியலமைப்பின் ஜனநாயக அடித்தளத்தை சீர்குலைக்கும் முயற்சியாக பாஜக அரசு மேற்கொண்டுள்ளதாக கடுமையாக கண்டித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது “இந்த மசோதா, எந்தவொரு விசாரணையோ, தீர்ப்போ இல்லாமல், 30 நாள் காவலில் இருப்பதை மட்டுமே காரணமாக வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை பதவியில் இருந்து நீக்குவதற்கு வழிவகுக்கும் என்று அவர் குற்றம்சாட்டினார். இது ஜனநாயகத்தின் அடிப்படையை அச்சுறுத்துவதாகவும், பாஜகவின் “வாக்கு திருட்டு” மோசடியிலிருந்து பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பவதற்காக கொண்டுவரப்பட்டதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் ” இது நீதித்துறையின் அதிகாரத்தை பறித்து, நியாயமான விசாரணை இல்லாமல் தண்டனை வழங்குவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது என்று அவர் கூறினார். மேலும், இந்த மசோதா பாஜக இல்லாத மாநில அரசுகளை அச்சுறுத்துவதற்கும், கூட்டணியில் உள்ள பிராந்திய கட்சிகளின் தலைவர்களை “எங்களுடன் இரு, இல்லையேல்…” என்று மிரட்டுவதற்கும் உருவாக்கப்பட்டதாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

மேலும் இது குறித்து அவர் பேசுகையில் “சூப்பர் அவசரநிலையை” விட பெரிய அபாயமாக உள்ளதாகவும், இது ஒரு கட்சி, ஒரு அரசு, ஒரு தலைவர் என்ற முறையை நோக்கி நாட்டை தள்ளுவதாகவும் குறிப்பிட்டார். அவர் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்து, இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மத்திய அரசின் புலனாய்வு முகமைகளான ஈடி, சிபிஐ போன்றவற்றை “கூண்டு கிளிகளாக” பயன்படுத்தி மாநில அரசுகளை கவிழ்க்கும் முயற்சியாக உள்ளதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.