தூத்துக்குடி :தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் வின்தூத்துக்குடியில் எலக்ட்ரிக் கார் தயாரிக்கும் வின்ஃபாஸ்ட் தொழிற்சாலையை CM மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். முதல் காரில் கையெழுத்திட்டு விற்பனையை தொடங்கி வைத்த அவர், கனிமொழியுடன் சேர்ந்து எலக்ட்ரிக் காரில் முதல் ஆளாக பயணம் செய்தார்.
அதன் பிறகு, அந்த ஆலைக்குள் நடைபெறும் பணிகள் குறித்து அங்கு சென்று பார்வையிட்டு வந்தார். தொடர்ந்து ஆலையில் தயாரித்த முதல் காரையும் அவர் பார்வையிட்டார். இந்த நிகழ்வின் போது அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
மேலும், இந்த ஆலையில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 50,000 மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆலை தூத்துக்குடி- மதுரை புறவழிச்சாலையில் 114 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,119.67 கோடி முதலீட்டில் முதற்கட்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் இந்த ஆலை, வி.எப் 6 மற்றும் வி.எப் 7 வகை மின்சார கார்களை உற்பத்தி செய்யும். மொத்தமாக ரூ.16,000 கோடி முதலீடு செய்யப்பட்டு, ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இந்த ஆலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் தொழில் மையமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
